மே 20ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் பேச்சு
டெல்லி: தடைபட்டுப் போயுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மே 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பல கட்டங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை தடைபட்டுக் கிடந்தது. பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த அரசியல் குழப்பங்கள், வன்முறைகள், கலகங்கள், பெனாசிர் படுகொலை ஆகியவற்றால் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கிப் போயிருந்தது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளது. மே 20ம் தேதி இதுதொடர்பான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்த பின்னர் நடைபெறவுள்ள முதலாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 21ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாகிஸ்தான் செல்கிறார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஒட்டுமொத்த அளவில், இரு நாடுகளுக்கும் இடையே, விரைவில் நடைபெறவுள்ள 4வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.