வெள்ளச் சேதம் ரூ. 1,140 கோடி-மத்திய குழுவிடம் தமிழகம் விளக்கம்

சமீபத்தில் பருவம் தவறிப் பெய்த தொடர் கன மழையால் தமிழகத்தி்ன் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் வீடுகள், சாலைகள், பள்ளிகளும் சேதமடைந்தன. 24 பேர் பலியாயினர்.
இதையடுத்து தமிழக அரசு இரு கட்டமாக ரூ. 100 கோடியும், ரூ. 75 கோடியும் ஒதுக்கி நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டது.
மார்ச் மாதத்தில் இயல்பாக பெய்யக்கூடிய அளவான 19.9 மி.மீக்கு எதிராக 158.03 மி.மீ மழை பதிவானது. இது இயல்பான அளவை காட்டிலும் 694 சதவீதம் கூடுதலாகும்.
இந்த மழை, வெள்ள சேதம் குறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி கோரியது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான நிபுணர் குழு கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்தது.
இந்தக் குழுவில் மத்திய செலவினத்துறை துணை இயக்குநர் தீனாநாத், மத்திய வேளாண்துறை, புகையிலை வளர்ச்சி இயக்குநர் (பொ) டாக்டர் கே.மனோகரன் மற்றும் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கண்காணிப்புப் பொறியாளர் எம்.ஜே.ஜெயச்சந்திரன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
ஆய்வுப் பணிகளுக்காக அரசு ஹெலிகாப்டரும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
நேற்று சென்னை கோட்டையில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்தக் குழு விரிவான ஆலோசனை நடத்தியது.
அப்போது மாநிலத்தில் 3.91 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும்,
13,000 கி.மீ நீளமுள்ள சாலைகளும், 1,123 சிறு பாலங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவை தீவிர பாதிப்படைந்ததாகவும், இவை தவிர, நீர்வள ஆதாரங்கள், குடிநீர் விநியோக அமைப்புகள் மற்றும் கைத்தறி உடமைகள் ஆகியவையும் பாதிப்படைந்ததாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கினார்.
மொத்த சேத மதிப்பு ரூ.1,140 கோடி அளவுக்கு உள்ளதால் இந்த நிதியை தேசிய பேரிடர் எதிர்பாரா செலவின நிதியிலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று பெரியசாமி கோரினார்.
கூட்டத்தின் முடிவில், சேதம் குறித்த அறிக்கையினை மத்திய அரசிற்கு விரைவில் சமர்ப்பிப்பதாக மத்திய குழுவினர் உறுதி அளித்தனர்.