தொலைபேசி ஒட்டுக்கேட்பு: நீதி விசாரணைக்கு கருணாநிதி உத்தரவு

தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியும், லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி உபாத்யாயாவும் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து பேசிக் கொண்டதை தமிழக உளவுப் பிரிவினர் ஒட்டுக் கேட்டதாக ஆங்கில நாளிதழ் டெக்கான் குரோனிக்கிள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆடியோவை ஒளிபரப்பிய ஜெயா டிவி:
இதுதொடர்பான ஆடியோ பதிவை ஜெயா டிவி ஒளிபரப்பியுள்ளது. இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந் நிலையில் இன்று காலை தமிழக சட்டசபை கூடியதும், கொடநாடு எஸ்டேட் தொடர்பாக தலைமைச் செயலாளர் திரிபாதி- லஞ்சஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து விவாதம் நடந்த வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கூறினர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூறுகையில், நாங்கள் ஒரு முக்கிய பிரச்சினை குறித்து சிறப்பு ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க சபாநாயகரிடம் கோரிக்கை கொடுத்துள்ளோம். அது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர்.
அதற்கு சபாநாயகர், நீங்கள் யாரைப்பற்றியும் குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளதுஎன்றார்.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாரம் இருக்கிறது என்று கூச்சலிட்டனர். அந்த செய்தி வெளியான ஒரு ஆங்கில நாளிதழையும் தூக்கிக் காட்டினர்.
ஆனால், ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி தர சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் சபையில் அமளி ஏற்பட்டது.
இந் நிலையி்ல் திரிபாதி-உபாத்யாயா தொலைபேசி பேச்சு என்ற பெயரில் வெளியான பத்திரிகை செய்தியை தூக்கிக்காட்டி அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பதிலுக்கு ஆளும்கட்சித் தரப்பு உறுப்பினர்களும் அதிமுகவினருக்கு எதிராக கோஷமிட்டனர். அதிமுகவினரை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டும் அமளி தொடர்ந்தது.
அப்போது முதல்வர் கருணாநிதி பேசுகையில், இந்த விவகாரத்தில் அதிமுக உறுப்பினர்கள், அரசிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை அமைதியாகச் சொல்லட்டும். அதற்கான விளக்கத்தை அளிக்கத் தயார் என்றார்.
ஆனால் அவரை தொடர்ந்து பேசவிடாமல், தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதி ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அதிமுகவினர் கோஷமிட்டனர்.
அப்போது பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுந்து, ஏற்கனவே இது போன்று அரசியல் தலைவர்களின் போன் பேச்சு ஒட்டு கேட்கப்படுவது பற்றி அந்த ஆங்கில பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எங்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் பேச்சும் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூறப்பட்டது.
இப்போது அதிகாரிகள் பேச்சு ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று, முக்கிய எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுக்காமல் தோழமைக் கட்சிகளுக்கு மட்டும் பேச வாய்ப்பு கொடுப்பதாக கோஷமிட்டனர்.
அதற்கு சபாநாயகர், முதல்வர் பதில் சொல்லி விட்டார். உட்காருங்கள் என்றார். ஆனால், அதை அதிமுகவினர் காதில் வாங்கவில்லை.
அப்போது நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, அதிமுகவினர் இப்படி கூச்சல்தான் போடுவார்கள் என்றால், அவர்கள் வெளியில் செல்வது நல்லது என்றார்.
இதை கேட்டதும் அதிமுகவினர் கூச்சல் அதிகமானது. இதையடுத்து சபை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் உங்களை வெளியேற்றுகிறேன் என சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார்.
இதையடுத்து சட்டசபை காவலர்கள் உள்ளே வந்தனர். காவலர்கள் வந்ததும் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபடியே சட்டசபையை விட்டு ஒவ்வொருவராக வெளியேறினர்.
பின்னர் லாபியில் நின்று கொண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதன் பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, அதிகாரிகள் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடக்கும் என்று அறிவித்தார்.