• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்: கருணாநிதி

By Staff
|

Karunanidhi
சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் திட்டமிட்டு சில டிவி, பத்திரிக்கைகள் விஷமத்தை பரப்பி வருவதாக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்ைக:

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில பத்திரிக்கைகள், எழுதி வருகின்றன. நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைப் பொறுக்க முடியாமல்தான் இப்படி என் மீது அவதூறை வாரி வீசுகின்றனர்.

இந்த முதல்வரிடம் முப்புரி நூல் இல்லை, நான் பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. பிரம்மனின் காலிலிருந்து உதித்த சமூகத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன். அதனால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.

நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தினால்தான், சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள், அரசின் சாதனைகளை மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே எனக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

நிக்சனும், ஹெக்டேயும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டுக் காரணமாகத் தான் பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் தமிழகத்தில் இரு அதிகாரிகளுக் கிடையே தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து என்னை பதவி விலக சொல்வது விஷமத்தனமானது.

என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த போதிலும், இப்படி கூறுவது சரியல்ல.

நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும், விசாரணைக்கு நீதிபதியை நியமித்த பின்னரும் ஒரு வார இதழ் என்னை விமர்சித்து எழுதியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சென்னை மாநகரில் நடுத்தர குடும்பம் குடியிருக்க 1500 சதுர அடி கொண்ட வீட்டுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வாடகை தர வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

ஆனால், அண்ணா மேம்பாலம் அருகே சென்னையின் மையப்பகுதியில் சுமார் 20 கிரவுண்ட் நிலத்தில் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றை மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பல ஆண்டுகாலமாக கொடுத் திருப்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாளிகள் என்று நினைத்திருந்ததையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தொழில் வளர்ச்சியில் அரசு தீவிரம்:

தமிழகத்தில் வாரந்தோறும் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் நாட்டம் காட்டுவதாலும், தொழிலதிபர்களுடன் அரசு நல்லுறவைப் பேணுவதாலும் இது சாத்தியமாகியுள்ளது.

தமிழகத்தைப் பிடித்துள்ள இருள் நீங்க பெளர்னமி தினத்தன்று வீடுகள் தோறும் விளக்கேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதை அக்கட்சியின் கோவை நிர்வாகிகளே விமர்சித்துள்ளனர். இப்படிப்பட்ட போராட்டங்களை யார் முடிவு செய்வது, யார் அனுமதி கொடுத்தது என்று அவர்கள் கேட்டுள்ளதாக ஒரு வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

நன்றி இல்லாத அதிமுக:

சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரு அதிமுக எம்.எல்.ஏக்களுக்குமான தண்டனையை நான்தலையிட்டு குறைத்ததற்கு நன்றி கூறக் கூட அதிமுக முன்வரவில்லை.

நான் சட்டமன்ற கட்சித் தலைவர்களிடம் ஒருபோதும் நன்றிக்கடனை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் எனக்கு அவர்கள் நன்றி கூறினால், அவர்களுக்கு என்ன ஆகும் என்பதை நான் அறிவேன் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X