For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலிவுவிலை தடுப்பூசியால் குழந்தைகள் பலி: ஜெ புகாருக்கு தமிழக அரசு மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: காலாவதியான மலிவுவிலை தடுப்பூசி போட்டதால்தான் குழந்தைகள் பலியானதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு அபாண்டம் என்று தமிழக அரசு மறுத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறி்க்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டதில் 4 குழந்தைகள் பலியாயின.

தடுப்பூசி மற்றும் அதற்கான மருந்துகள் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக இருந்ததா? என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. இதனால் தடுப்பூசிகள் மற்றும் மருந்துப் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் மருத்துவமனைகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலம்வரை தடுப்பூசி மருந்து புனேயில் உள்ள நிறுவனத்திடமிருந்து ஒரு டோஸ் 8 ரூபாய் என்ற விலைக்கு தமிழக அரசால் வாங்கப்பட்டுவந்தது. சில மாதங்களுக்கு முன்பு அதை நிறுத்திவிட்டு ஒரு டோஸ் 7 ரூபாய்க்கு என்ற குறைந்த விலையில் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த மலிவுவிலை தடுப்பூசி மருந்துதான் 4 குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிவிட்டது. நிர்வாகச்சீர்கேட்டினால் காலாவதியான தடுப்பூசியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை தமிழக அரசு வன்மையாக மறுத்துள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலாவதியான, மலிவுவிலை தடுப்பூசியை போட்டதால் 4 குழந்தைகள் பலியாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றம்சாட்டு தவறாகும்.

அந்த தடுப்பூசி மருந்துகளை ஐதராபாத்தில் உள்ள 'ஹ்யூமன் பயோலாஜிக்கல் இன்ஸ்டிடியூட்' என்ற மருந்து நிறுவனம் தயாரித்தவை. அந்த மருந்துகளில் தயாரிப்பு தேதி பிப்ரவரி 2008 என்றும் காலாவதி தேதி ஜனவரி 2010 என்றும் இருந்தது.

ஜெயலலிதா கூறியதைப் போல் தடுப்பூசிகளை தமிழக அரசு எப்போதுமே நேரடியாக கொள்முதல் செய்ததில்லை. தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்குவதுதான் வழக்கம்.

ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி மருந்துகளை குளிர்சாதனங்களில் வைத்து பராமரிக்கும் முறை பற்றி சந்தேகம் எழுப்புவதற்கு இடமேயில்லை. இந்த மையங்களில், குறிப்பிட்ட குளிர்நிலையில் தடுப்பூசி மருந்துகளை தொடர்ந்து பராமரிக்கும்வகையில் தடையற்ற மின்சார சப்ளை உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் இந்த குளிர்நிலையை உறுதிசெய்ய தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை, மாலை இருவேளைகளிலும் மருந்தின் குளிர்நிலை கணக்கெடுக்கப்பட்டு பதிவேட்டில் குறிக்கப்படும். இதுதவிர, தடுப்பூசி மருந்து பாட்டில்களை பராமரிக்கும் பெட்டியில் உள்ள மானிட்டர் மூலமும் குளிர்நிலை கண்காணிக்கப்படுகிறது.

ஏதாவது புட்டியில் உள்ள மருந்தின் நிறம் மாறியிருந்தால் அந்த ஊசிமருந்தை பயன்படுத்துவதில்லை.

தடுப்பூசிகளை சிறந்த முறையில் பராமரிப்பதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரியாக உள்ளது. குழந்தைகள் பலியான ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்ட மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள்கூட தடுப்பூசி மருந்துகள் பராமரிப்பை பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X