சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியில் இருந்தார்.
ஷாவின் பதவிக்காலத்தின்போது மொத்தம் 34 புதிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளனர். இது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனையாகும்.
ஷா பதவியேற்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 22 நீதிபதிகள்தான் (மொத்த இடம் 49) இருந்தனர். தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆகும்.
சென்னை நகரில் அங்கீகாரமற்ற வகையில் கட்டப்பட்ட சட்டவிரோதா கட்டடங்களுக்கு எதிராக ஷா அளித்த தீர்ப்பு, அவரது பதவிக்காலத்தில் மிக முக்கிய தீர்ப்புகளில் முதன்மையானதாகும்.
உடல் ஊனமுற்றவர்களின் நலனுக்காக ரயில்கள் மற்றும் பேருந்துகளில் சிறப்பு வீல் சேர் உள்ளிட்ட வசதிகள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பஸ்களை விட உத்தரவிட்டதும் ஷாவின் முக்கிய தீர்ப்புகளில் சில.
இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக சென்னை நகரில் லிப்ட் பொருத்தப்பட்ட பேருந்துகள் விடப்பட்டன. மேலும், உயரமான படிக்கட்டுக்களைக் கொண்ட கட்டடங்களில் ஊனமுற்றோர் எளிதாக செல்லும் வகையில் சரிவு தளங்களும் (ரேம்ப்) அமைக்கப்பட்டன.
ஏ.பி.ஷா, தலைமை நீதிபதியாக இருந்த 29 மாத காலமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்வுகள் நிரம்பிய காலமாக இருந்தன என்றால் அது மிகையாகாது.
சென்னையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஷா, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
ஷாவுக்குப் பதில் ஏ.கே.கங்குலி புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கங்குலி தற்போது ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.பி.ஷாவுக்கு வருகிற 13ம் தேதி பிரிவுபசார விழா நடைபெறவுள்ளது. வருகிற 21ம் தேதிக்குள் அவர் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்கத்தைச் ேசர்ந்தவர். ஆங்கிலத்தில் எம்.ஏ. படித்துள்ள கங்குலி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். 1971ல் வக்கீலாக தனது சட்டத் தொழிலை தொடங்கினார். கொல்கத்தா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றியுள்ளார்.
அரசியல் சட்டம், அரசு பணி, தொழிலாளர், கம்பெனி, கல்வி, வருவாய், சுங்கம், சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி அனுபவம் பெற்றவர்.
10.1.1994-ல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 4.4.1994-ல் பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக பணிபுரிந்தார்.
பின்னர் இடம் மாற்றம் செய்யப்பட்டு 1.8.2000-ம் ஆண்டில் இவர் மீண்டும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். மார்ச் 2005 வரை அங்கு நீதிபதியாக பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் 2 முறை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
இதன் பின்னர் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு 21.4.2006-ல் ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். அங்கு மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தார்.