அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி-அண்ணா பல்கலை அமைக்கிறது

அரியலூரில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என சமீபத்தில் சட்டசபையில் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியிலேயே இந்தக் கல்லூரியை தொடங்கவும் பின்னர் இதற்கென தனியாக கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு ஒவ்வொரு பிரிவிலும் 60 மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரிக்கென 10 ஏக்கர் நிலத்தையும் ரூ. 20 கோடியையும் வழங்க திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழி்ல்நுட்பத்துறை அமைச்சர் ராசா முன் வந்துள்ளார். தனது பெற்றோர் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளையின் பெயரில் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை நிலத்தையும் நிதியையும் வழங்கவுள்ளது.
முதல்வர் கருணாநிதியிடம் பேசி இந்தக் கல்லூரியை அமைப்பதி்ல் முக்கிய பங்கு வகித்தவர் ராசா என்பது குறிப்பிடத்தக்கது.