For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் ரூ.11680 கோடி விவசாய கடன் ரத்து-ராகுல் யோசனை ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ராகுல் காந்தியின் யோசனையை ஏற்று பெரிய விவசாயிகளின் கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மேலும் ரூ.11,680 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்தாகின்றன.

கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ.60,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பெரிய விவசாயிகளுக்கும் இந்த கடன் தள்ளுபடியால் பயன் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந் நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரிய விவசாயிகளும் பயனடையும் வகையில் கடன் தள்ளுபடி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து ராகுலின் யோசனையை ஏற்று, கடன் தள்ளுபடி தொகையை மத்திய அரசு மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி மேலும் ரூ. 11,600 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இதனால் மொத்தம் ரூ.71,680 கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன்கள் ரத்தாகவுள்ளன.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 4 கோடி சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் பயனடையவுள்ளனர்.

சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களுடைய கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் முதல் இந்த கடன் தள்ளுபடி திட்டம் அமலுக்கு வரும்.

இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,

ஒரு ஹெக்டேர் (21.5 ஏக்கர்) நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் என்றும் 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயிகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழுக் கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

2 ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் கடன்களை பொருத்தவரை, ஒரே நேரத்தில் பைசல் செய்யும் திட்டப்படி, கடன் தொகையில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதி தொகையை 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் 3 தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் நிலுவை தொகைக்கான வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.

நாடு முழுவதும் வறட்சிப் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்ட 237 மாவட்டங்களை சேர்ந்த பெரிய விவசாயிகள் கடன் தொகையில் 25 சதவீதம், அல்லது ரூ.20,000 தள்ளுபடியாக பெறுவார்கள்.

இந்த கடன் நிவாரண திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டும் விதிமுறைகள் வங்கிகள், கிராமப்புற பிராந்திய வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகள் ஆகியவற்றுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த திட்டப்படி ஒவ்வொரு வங்கியும், விவசாயிகளின் பெயர் மற்றும் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை பற்றிய பட்டியலை தயாரித்து அளிக்க வேண்டும்.

கடன் நிவாரணம் பெறுவதற்காக, விவசாயிகள் ஆவணங்கள் எதையும் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, வங்கிகள்தான் அவர்களுக்கு கடன் தள்ளுபடி விவரங்கள் அடங்கிய சான்றிதழை வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் பெறுவதற்காக, குறை தீர்க்கும் பிரிவு ஒன்றை தொடங்கும்படியும் வங்கிகளுக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.
கடன் நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதை தேசிய அளவில் அமைக்கப்படும் உயர் மட்ட குழு மூலம் கண்காணிக்கப்படும்.

இதுபோன்ற கடன் நிவாரண திட்டத்தை இதுவரை இந்தியாவில் எந்த அரசும் அறிவித்தது இல்லை. 6 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாஜக கூட்டணி அரசால் இப்படிப்பட்ட ஒரு திட்டம் யோசிக்கப்படக் கூட இல்லை. எங்கள் ஆட்சியின் 4வது ஆண்டு இறுதியில் இந்த திட்டத்தை துணிச்சலுடன் அறிவித்துள்ளோம்.

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை திரட்டிவிட முடியும். திட்டத்தை செயல்படுத்துவதற்கு வங்கிகள் குறுக்கே நிற்காது. பெரும்பாலான வங்கிகள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன.

கடன் தள்ளுபடி தொகை வங்கிகளுக்கு மத்திய அரசால் திருப்பி கொடுக்கப்பட்டுவிடும் என்றார் சிதம்பரம்.

இதற்கான நிதியை எப்படி திரட்டுவீர்கள் என்று சிதம்பரத்திடம் கேட்டதற்கு, அதற்கு உங்களிடம் தான் (மக்களிடம்) வரி விதிக்க வேண்டும் என்றார் சிரித்தபடியே.

அப்ப, இன்னொரு வரியா?..
எங்களுக்கு சிரிப்பு வரலையே சிதம்பரம்ஜி!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X