அரசியல் 'விளையாட்டு': 'கூடை'க்கு கோவிந்தா!
கரூர்:கரூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வந்த அகில இந்திய கூடை பந்து போட்டி அரசியல் விளையாட்டால் ரத்தாகியுள்ளது.
கரூரில் அகில இந்திய கூடை பந்து போட்டி கடந்த 50 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஐஓபி, பிஇஎல், பிஎஸ்என்எல், சிஆர்பிஎப், ஐசிஎப், ஹெச்ஏஎஸ்சி, சென்ட்ரல் எக்ஸ்சைஸ், சதர்ன் ரயில்வே, டிஎல்டபிள்யூ, இந்தியன் ஆர்மி போன்ற புகழ் பெற்ற அணிகள் விளையாடுவது வழக்கம்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு புகழ் பெற்ற எல்ஆர்ஜி நாயுடு பெயரில் எல்ஆர்ஜி நாயுடு மெமோரியல் கோப்பை கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த போட்டித் தொடருக்கு இந்த ஆண்டு பெரும் சோதனை வந்துள்ளது. இதற்குக் காரணம் கூடைப்பந்தாட்டக் கழகத்தில் புகுந்த அரசியல்தான்.
சமீபத்தில் திருச்சியைச் ேசர்ந்த அமைச்சரின் உறவினரான உயரமான நடிகரின் தலைமையில் ஒரு புது கூடைப்பந்தாட்டக் கழகம் தொடங்கப்பட்டது. இதற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.
தமிழக கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவராக இருந்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தியானேஸ்வரன். இவருக்கும் அந்த அமைச்சருக்கும் ஆகாது. அடிக்கடி மோதிக் கொண்டனர். அவரை பதவியிலிருந்து அகற்ற கூடைப்பந்தாட்டக் கழகத்தை உடைக்க முயற்சி நடந்தது. ஆனால் தியானேஸ்வரன் தப்பி விட்டார். இதைத் தொடர்ந்துதான் உயரமான நடிகரைத் தலைவராகக் கொண்டு புதிய கழகம் பிறந்தது.
புதிய கழகத்திற்கும், பழைய கழகத்திற்கும் இடையே குஸ்தி தொடங்கியது. அகில இந்திய கூடைப்பந்து போட்டு மே 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிகரைத் தலைவராகக் கொண்ட கழகம், முன்கூட்டியே ஒரு போட்டியை நடத்தி விட்டது.
மேலும், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்த அகில இந்திய கூடைபந்து விளையாட்டு போட்டி மைதானத்தை சிலர் சில தினங்களுக்கு முன்பு தாக்கினர். அங்கு போடப்பட்டிருந்த கேலரிகளையும் நாசப்படுத்தினர்.
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பிலும் இதுகுறித்துப் புகார் செய்யப்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது தமிழக கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அகில இந்தியப் போட்டி இந்த ஆண்டு நடத்தப்பட முடியாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
50 ஆண்டுகளாக நடந்து வந்த போட்டித் தொடர், அரசியல் காரணமாக தடைபட்டது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.