For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாயில் இறங்கியது 'பீனிக்ஸ்'

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் தரையிறங்கியுள்ளது அமெரிக்கா அனுப்பிய அதி நவீன விண்கலமான பீனிக்ஸ். தனது முதல் புகைப்படங்களையும் அது அனுப்பி வைத்துள்ளது.

பூமியைத் தாண்டி செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழும் சூழ்நிலை இருப்பதாக நம்பப்படுகிறது. அங்கு தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய் கிரக ஆய்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில்தான் பெருமளவில் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வட துருவத்தில் முழுமையான ஆய்வை நடத்த பீனிக்ஸ் என்கிற அதி நவீன விண்கலத்தை நாசா வடிவமைத்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பீனிக்ஸ் செவ்வாய் பயணத்தைத் தொடங்கியது. கிட்டத்தட்ட 10 மாத பயணத்திற்குப் பின்னர், 422 மில்லியன் மைல்களைக் கடந்த செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் நேற்று பீனிக்ஸ் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய் கிரகம் பத்திரமாக தரையிறங்கியதும், பாசதீனா நகரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆரவாரத்துடன் கைகளைத் தட்டி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்ட பிரசுன் தேசாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுதான் பீனிக்ஸ் தரையிறங்குவதை கண்காணித்து வந்த குழு என்பது குறிப்பிடத்தக்கது.

10 மாதமாக பீனிக்ஸ் பயணம் செய்ததை விட அது தரையிறங்க எடுத்துக் கொண்ட 7 நிமிடங்கள்தான் நாசா விஞ்ஞானிகளை பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் வெற்றிகரமாக பீனிக்ஸ் தரையிறங்கியதால் அனைவரும் பெரும் நிம்மதியடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு 12,000 மைல் வேகத்தில், பீனிக்ஸ் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் தரையிறங்கியுள்ள பீனிக்ஸ் விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

அது அனுப்பியுள்ள முதல் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. விண்கலத்தின் இரு பகுதிகளின் படங்கள் மற்றும் பரந்து விரிந்து கிடக்கும் செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பு ஆகியவற்றை பீனிக்ஸ் படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

பீனிக்ஸ், செவ்வாயில் 3 மாதங்களுக்கு தங்கியிருக்கும். அங்கு உறைந்த நிலையில் உள்ள தண்ணீர் எப்போதாவது உருகியிருக்கிறதா என்பது குறித்தும், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற வாய்ப்புகள் செவ்வாயில் உள்ளதா என்பது குறித்து பீனிக்ஸ் முக்கியமாக ஆராய உள்ளது.

இந்த ஆய்வு குறித்து பிரசுன் தேசாய் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏராளமான தாதுக்கள் இருப்பதாக கருதுகிறோம். அதுகுறித்து இந்த முறை விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற நேரடி வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அதேசமயம், அதற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்புகிறோம் என்றார் தேசாய்.

பீனிக்ஸ் அனுப்பப் போகும் படங்கள், கொடுக்கப் போகும் தகவல்களை நாசா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X