ஆண்டு முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா-திமுக

திமுக பொதுக்குழு இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் கூடியது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா, மாட்டாரா என்ற பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.
முதல்வர் கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இதில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 480 பேர் உள்பட மொத்தம் 1,820 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ள நாம்; அந்த வாய்ப்பை அண்ணா உருவாக்கிய இந்தக் கழகத்தின் சார்பாக வையகமே வியக்குமளவுக்கு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதென்றும்-
அண்ணாவின் கொள்கை முழக்கம், அவர் உருவாக்கிய இன எழுச்சி, பகுத்தறிவுப் புத்துணர்ச்சி அனைத்தும் பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பரவிட ஒல்லும் வகையெல்லாம் பணியாற்றி அவற்றைப் பரப்புவதென்றும்-
அந்தப் பெரு விழா நிகழ்ச்சிகளை வரும் செப்டம்பர் திங்கள் 15 முதல் வகைப்படுத்தி நடத்துவதென்றும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
திமுகவில் மெளன யுத்தம்?:
சில காலமாகவே திமுகவுக்குள் ஒரு மெளன யுத்தம் நடந்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரியும், திமுகவில் மு.க.அழகிரிக்கு முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும், கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தர வேண்டும் என்றும் முதல்வருக்கு பல முனைகளிலிருந்து குறிப்பாக குடும்பத்திலிருந்து நெருக்குதல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான மு.க.ஸ்டாலின், திடீரென கிளம்பி பெங்களூர் சென்று ஓய்வெடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக் குழுவில் பங்கேற்பதை தவிர்க்க அவர் அப்படியே லண்டன் செல்லப் போவதாக செய்திகள் வந்தன.
ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் நேற்று முன் தினமே அவர் சென்னை திரும்பிவிட்டார். இன்று பொதுக் குழுவிலும் பங்கேற்றார்.
இந்தச் சூழலில்தான் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடியது. அதி்ல் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, திமுகவில் மு.க.அழகிரிக்குப் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை.