நாளை முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள்-ஆன்லைனினும் பெறலாம்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை (ஜூன் 3ம்) முதல் வழங்கப்படவுள்ளன.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன. இந்தப் படிப்பில் சேர 1.25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந் நிலையில் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் 17ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும்.
மேலும் www.tnhealth.org மற்றும் www.tn.gov.in ஆகிய இணைய தளங்களிலும் விண்ணப்பங்களை 'டவுன்லோடு' செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் ஜூன் 17. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,398 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 251 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 85 இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.