For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அழகிரி கேபிள்'-மார்க்சிஸ்ட் விமர்சனம், திமுக கடுப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் தொடங்கப்பட்ட ராயல் கேபிள் விஷனால் பொது மக்கள் இடர்பாடுகளை சந்தித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது மனதிற்கு வருத்தம் தருவதாக திமுக கூறியுள்ளது.

மதுரை நகரில் (மு.க. அழகிரியின்) ராயல் கேபிள் தொடங்கப்பட்டதில் இருந்து பொது மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருவதாக (சன் டிவி ஒளிபரப்பு தடைபட்டது..) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் தலைவரும் எம்.பியுமான குப்புசாமி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதி்ல் கூறப்பட்டுள்ளதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பாதிப்புக்கு உள்ளான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தபோது "அரசு கேபிள் கார்பரேஷன்'' என்ற ஒரு மாநில அரசின் பொதுத் துறை நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கி நடத்த இருக்கிறது என்றும்,

அதன் மூலம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் முதல்வர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், அந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த முன் வர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு அப்படியே கடந்த ஆட்சிகளைப் போல கிடப்பில் போடப்படவில்லை என்பதும், இந்த அறிவிப்புக்கு பிறகு அதற்கான அதிகாரிகள் எல்லாம் நியமிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை கொண்ட குழு ஒன்றும் நியமித்து அவர்களோடு முதல்வரும், தலைமைச் செயலாளரும் மற்ற மூத்த அதிகாரிகளும் பலமுறை கலந்துரையாடல் நடத்தி, அந்த திட்டத்தை செம்மையாக நடத்துவதற்கான முறைகள் பற்றி எல்லாம் பேசப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் அவ்வப்போது ஏடுகளிலே வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அது மாத்திரமல்ல டெண்டர் பெற இறுதி தேதி கடந்த மார்ச் 12ம் தேதி அறிவிக்கப்பட்டு, அவைகள் பெறப்பட்டு, கடந்த ஏப்ரல் 4ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில்,

ஜூலை மாதம் 15ம் தேதி முதல் நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர்,சேலம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அரசு கேபிள் இணைப்பை பொது மக்கள் தொலைக்காட்சி பயன்பாட்டுக்கு வழங்குவது என்றும்,

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசு கேபிள் இணைப்பை வழங்குவது என்றும்,

செப்டம்பர் 15ம் தேதி முதல் சென்னை மாநகரிலும் அரசு கேபிள் இணைப்பை வழங்குவது என்றும் முடிவெடுத்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தற்போது அரசு நிறுவனத்தை தொடங்க எதோ தாமதம் ஏற்பட்டு விட்டதைப் போலவும், அதனை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.

தனியார் ஒரு நிறுவனத்தை தொடங்குவது என்றால் அதற்கு எந்தவிதமான கேள்வியையும் யாராலும் கேட்க முடியாது.

ஆனால் அரசு ஒரு நிறுவனத்தை தொடங்குவதென்றால் தன்னிச்சையாக நினைத்தேன், முடித்தேன் என்று செய்து விட்டால், பிறகு இந்த தலைவர்களே இந்த திட்டத்திலே முறைகேடு- தன்னிச்சையாக ஒரு கம்பெனிக்கு உதவி செய்வதற்காக பணியினை ஒப்படைத்து விட்டார்கள். அரசு பணம் விரயம் என்றெல்லாம் கேள்விகளை கேட்பார்கள்.

அதனால் தான் அரசின் சார்பில் பணியினை செய்யும் போது, அதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதற்குத் தேவையான நாட்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகளை பெற்று அதன் பிறகு தான் தேவையான எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டு, அதற்காக அதிகாரிகள் பலமுறை டெல்லிக்கு அலைந்து அவைகளைப் பெற்று திட்டத்தை நிறைவேற்றிட வேண்டியுள்ளது.

அரசு சார்பில் ஒரு பொது கேபிள் கார்ப்பரேஷனை தொடங்கி அதனை ஓராண்டிற்குள் நிறுவுவதில் எவ்வளவோ சிரமங்கள் இருக்கின்றன.

கடைசியாக கடந்த மே 30ம் தேதி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை நகரில் ராயல் கேபிள் தொடங்கியதால், பொது மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வந்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் ராயல் கேபிள் தொடங்கப்பட்டு 2 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் பொது மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்துள்ளனர் என்று அறிக்கையிலே கூறப்பட்டுள்ளதன் பொருள் நமக்குப் புரியத்தான் செய்கிறது.

13ம் தேதி தேதி காலை நாளேட்டில் ராயல் கேபிள் தொடங்கியதால், பொது மக்கள் இதுவரை செலுத்தி வந்த கட்டணத்தில் 50 சதவீத அளவிற்கு கட்டினாலே போதும் என்றும், குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு அதிக நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தான் அது தொடங்கப்படுகிறது என்றும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டு, அதனை பொது மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள் என்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு கிடைத்துள்ள அந்த பயனை அருமை மார்க்சிஸ்ட் தலைவர்கள் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள் நோக்கம் மனதிற்கு வருத்தத்தை தருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் குப்புசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X