For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகள் இணைப்பு: தமிழகமே முன் மாதிரி-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
திருச்சி: நாங்கள் நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெறுமேயானால், சேது சமுத்திரத் திட்டத்தையும் நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார். இத் திட்டத்தின் முதல் கட்டமாக திருச்சி மாயனூரில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது கருணாநிதி பேசியதாவது:

இங்கே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவிலேயே நாம் நீண்ட காலமாக எடுத்துச்சொல்லி முதன் முதலாக நிறைவேற்றப்படுகின்ற ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க தொடக்க விழா நிகழ்ச்சி ஆகும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டும் நடுவர் மன்றமும் தமிழகத்திற்கு உரிய நியாயத்தை உணர்ந்து தீர்ப்புகள் வழங்கியுள்ள போதிலும், அந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில், அண்டை மாநிலங்கள், கர்நாடகம் உட்பட- தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுத்து வருகின்றன.

மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலமும், நேரிலும் கோரிக்கைகள் விடுத்தும், நீதிமன்றங்கள் மூலமாக அணுகியும்கூட பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை. எனவே, இந்தத் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் எனும் கருத்து இப்பொழுது நாடு முழுவதும் எழுந்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொண்டேன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 53வது தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில், பதினோராவது திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கான அணுகுமுறைகளில், தீபகற்ப நதிகளை இணைப்பதற்கான செயல்திட்டம் சேர்க்கப்பட்டு அதற்குத் தேவையான நிதியும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கூட்டத்திலேயே தீர்மானத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பிறகு நடந்த 54வது தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், நான் பேசும்போது, 53-வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என மறுபடியும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டேன்.

பின்னர், டெல்லியில் மீண்டும் 2008-2009ம் ஆண்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து, மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவுடன் நான் விவாதித்த போதும், தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென மீண்டும் எடுத்துரைத்தேன்.

எத்தனை மீண்டும்' பாருங்கள்! எத்தனை மறுபடியும்' பாருங்கள்! எத்தனை தேதிகள்' பாருங்கள்! அதனால்தான், மாநிலத்திலே சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி' என்கின்ற அந்த வாதத்தை அண்ணா நமக்கெல்லாம் ஆரம்பப் பாடமாகவே அரசியலிலே எடுத்துச் சொன்னார்கள்.

22.2.2008 அன்று மத்திய நீர்வள ஆதாரத்துறை மந்திரி சைபுதீன் சோஸ், தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், மாநிலத்திற்குள் பாயும் நதிகள் இணைப்புத் திட்டங்கள், வேளாண்மை மற்றும் பல்நோக்குத் திட்டங்களாக இருப்பதால், அவைகளுக்கு விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் திட்டதிற்கு, நீர்வள ஆதார அமைச்சகம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி மத்திய திட்டக் குழுவின் ஒப்புதலோடு நிதியுதவி வழங்கப்படும் என்று, கடைசியாக நாம் ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்கிற வகையில், நிதியுதவி வழங்கப்படும்' என்று மெல்லச் சொன்னார்கள்.

பின்னர் நம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலே பாயும் நதிகள் இணைப்புகளுக்கான பணிகள் வரும் 2008-2009ம் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று அறிவித்தோம்.

அதன்படி வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி- அக்னியாறு- கோரையாறு- பாம்பாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக; காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தோம்.

அதுதான் இன்றைக்கு செயல்படுத்தப்படுகின்ற தொடக்க விழாவாக நடைபெறுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், இத் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி, ரூ.165 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.

இது என்னுடைய தம்பிமார்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல், முதல் முதலாக மாநிலங்களுக்குள்ளே ஓடும் நதிகளை எல்லாம் இணைத்து, இந்த நதிகளினுடைய இணைப்பு விழாவை இந்தியாவிலேயே முதன் முதலாக நடத்துகிற மாநிலம் தமிழகம் ஆகும். அத்தகையதோர் மாபெரும் செயலாகும் இது.

நான் நதிகளை இணைக்கத்தான் இங்கு வந்திருக்கிறேன். திருச்சியிலே சில நண்பர்களையும் இணைக்க வேண்டும். (திருச்சியில் நிலவும் திமுக கோஷ்டி பூசலை குறிப்பிடுகிறார்..)

நீங்கள் கேட்காததையும் கொடுத்திருக்கிறோம். அப்படித்தான் நெல்லுக்கு விலை, நீங்கள் கேட்காமலேயே அறிவித்தோம். கடலூரில் நடந்த மாநாட்டில் கேஸ் சிலிண்டரின் விலையையும் குறைத்து மகளிரின் முகத்திலே புன்னகையை வரவழைத்தோம்.

இந்த வட்டாரத்திலே உள்ள வாழைத் தோட்ட வியாபாரிகள் பலரை எனக்குத் தெரியும். வாழைத் தோட்டம் வைத்திருப்பவர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், ஒரு வாழைத்தோட்டம் ஒரு மழையிலோ, ஒரு புயலிலோ அழிந்தால் எவ்வளவு நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என்பதிலிருந்து, அது ஒழுங்காக இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்பதையெல்லாம் நான் ஏற்கனவே தெரிந்து கொண்டிருக்கின்றேன். இருந்தாலும் அவர்களுடைய இழப்புக்களை ஈடுகட்ட இந்த அரசு முன்வரும் என்ற உறுதியையும் உங்களுக்கு இங்கே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்ற மாநிலங்கள் எப்படியோ, எனக்குத் தெரியாது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், நெருக்கடியை உணர்ந்து, அந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்ற வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விலைவாசி ஏறுகிறதா? எந்த அளவுக்கு ஏறியிருக்கிறது? எந்த அளவுக்குக் குறைத்தால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும் என்பதை யோசித்துப் பார்த்து அதற்கேற்ப பணியாற்றுகிறோம், நிர்வாகத்தை நடத்துகிறோம். அப்படி மக்களின் துயரங்களையும் அறிந்து, மக்களுடைய கஷ்டங்களையும் அளந்து பார்த்து அதற்கேற்ப நிர்வாகத்தை நடத்துகின்ற ஒரு அரசாக இந்த அரசு இருக்கிறது.

இன்றைக்கு காலையிலே உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும், அதிகாரிகளும் சென்று திருவாரூரிலே இடம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். எதற்கு? பல்கலைக்கழகத்திற்கு! திருவாரூரில் பல்கலைக்கழகம் வருகிறது. அது வெகுவிரைவிலே, இந்த ஆண்டே தொடங்கப்பட விருக்கிறது.

நமக்கு டெல்லியில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. நாங்கள் அறிவித்திருக்கின்ற பல்கலைக்கழகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக - கோயம்புத்தூரில், திருச்சியில் இங்கெல்லாம் ஏற்படட்டும். ஆனால் முதன் முதலில் திருவாரூரில்தான் இந்த ஆண்டு ஆரம்பிக்கிறோம். இடம் பார்த்து வையுங்கள் என்று மத்திய அரசின் கல்வித் துறையிலிருந்து செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்றால், ஒவ்வொரு நாளும், அணுப்பொழுதும் வீணாகாமல், ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்ற அங்குள்ள அரசு நமக்கு உதவிகளைச் செய்து வருகிறது.

இதுவரையிலே அந்த அரசால் நமக்குக் கிடைத்திருக்கின்ற உதவிகள், சாதகங்கள் எவையெவை என்பதையெல்லாம் நான் இங்கே அடுக்கிக்காட்ட நேரமில்லை. நாம் பேசுகின்ற தாய் மொழி, தமிழ் மொழி. அது செம்மொழியாக ஆவதற்கு சோனியா காந்தி தலையசைத்து, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டு, அமைச்சர் அர்ஜுன் சிங் அதற்கான ஆதரவினை நல்கி, நம்முடைய பழம்பெரும் புலவர் சூரிய நாராயண சாஸ்திரி, பரிதிமாற் கலைஞர் ஆகியோர் கண்ட கனவை நூறாண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு நாம் நிறைவேற்றுகிறோம்.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நாம் மொழியைப் பாதுகாக்க, மொழியை வளப்படுத்த, மொழியை வளமுள்ளதாக ஆக்க, நமது திட்டங்களை நிறைவேற்ற, இன்னும் நம்முடைய எண்ணம் நிறைவேறுமேயானால், நிறைவேறுவதற்கு நாங்கள் நடத்துகின்ற போராட்டம் வெற்றி பெறுமேயானால், சேது சமுத்திரத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு தயங்க மாட்டோம். நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X