For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியைக் காக்க ஏவுகணை 'ஷீல்ட்' ரெடி!

By Staff
Google Oneindia Tamil News

Missle Defence
டெல்லி: தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து காக்க வான் பாதுகாப்பு (Air Defence) திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட சோதனையை முடித்த பின்னர் டெல்லியை ஏவுகணைப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து நகரங்களைக் காக்க வான் பாதுகாப்பு திட்டம் உள்ளது. அதன் படி நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணை பாதுகாப்பு வளையத்தின் கீழ் அந்த நாடுகள் வைத்துள்ளன.

அந்த வரிசையில் விரைவில் இந்தியாவும் சேரவுள்ளது. இதற்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி கட்ட சோதனையை பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழக (டி.ஆர்.டி.ஓ.) அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர். அதன் பின்னர் தலைநகர் டெல்லியில் இந்த பாதுகாப்பு வளையம் அமல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின்படி, தலைநகர் டெல்லி, இரு கட்ட ஏவுகணைப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

முதல் கட்டமானது, பிருத்வி வான் பாதுகாப்பு என அழைக்கப்படும். எதிரி நாட்டிலிருந்தோ அல்லது தீவிரவாதிகளாலோ ஒரு ஏவுகணை ஏவப்பட்டால் அது ஏவப்பட்ட 8 விநாடிகள் அல்லது 10 கிலோமீட்டர் உயரத்தில் அது வரும்போது, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்குப் பகுதி எல்லையில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் அதை கண்டறியும்.

உடனடியாக இந்தத் தகவலை அவை டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கும்.

இதையடுத்து டெல்லி கட்டுப்பாட்டு மையம் முதலில் பிருத்வி வான் பாதுகாப்பு (Prithvi Air Defence) ஏவுகணையை ஏவும். எதிரி ஏவுகணைகளை பிருத்வி ஏவுகணைகள் வானில் 80 கிலோமீட்டர் உயரத்தில் எதிர் கொண்டு தாக்கி அழித்து விடும்.

ஒருவேளை இதிலிருந்து எதிரி ஏவுகணை தப்பி விட்டால், உடனடியாக மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defence) ஏவுகணைகள் ஏவப்படும். இந்த ஏவுகணைகள், 35 கிலோமீட்டர் உயரத்தில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழித்து விடும்.

பிருத்வியிடமிருந்து தப்பும் ஏவுகணைகள் நிச்சயம் மேம்படுத்தப்பட்ட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

இந்த வான் பாதுகாப்பு திட்டத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் டி.ஆர்.டி.ஓ. அமைப்பின் இரு ஆய்வகங்களான இமாரத் ஆய்வு மையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆய்வகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

விரைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனையை டி.ஆர்.டி.ஓ. நடத்தவுள்ளது. அது வெற்றிகரமாக இருந்தால் உடனடியாக தலைநகர் டெல்லியை ஏவுகணை வான் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய திட்டத்தின் படி, பிருத்வி அளவிலேயே எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு திட்டத்தை வலுவானதாக மாற்ற டி.ஆர்.டி.ஓ. திட்டமிட்டுள்ளது. அப்போதுதான் எதிரி நாடுகளுக்கு பயம் வரும், நமது பாதுகாப்பு அரண் வலுவானதாக உள்ளதை எதிரிகளுக்கு தெரிவிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ. கருதுகிறது. அதற்கேற்ப பிருத்வி வான் பாதுகாப்பு வளையத்தை எந்தவித தவறும் இல்லாத அளவுக்கு துல்லியமாக்கி வருகிறது டி.ஆர்.டி.ஓ.

நமக்கு மிக முக்கிய எதிரியாக பாகிஸ்தான் இருப்பதால் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களை வான் பாதுகாப்பு திட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரமத்திய அரசு நினைக்கிறது. முதலில் டெல்லியிலும், பின்னர் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த ஏவுகணை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.

அதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட தென் பிராந்திய நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X