For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானிகளான அம்மா - மகள்!

By Staff
Google Oneindia Tamil News

Pilots-Mother and Daughter
மும்பை: மும்பையில் வசித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் பைலட் பயிற்சியில் சேர்ந்து தேறி, இப்போது இருவரும் வெவ்வேறு விமான நிறுவனங்களில் கோ பைலட்டாக பணியில் சேர்ந்து புதுமை படைத்துள்ளனர்.

சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் வயது தடையில்லை, வேறு எதுவும் தேவையில்லை, முயற்சியும், ஆர்வமும்தான் முக்கியமாக தேவை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை.

உலக இசைக் கலைஞர்களின் உன்னத பொக்கிஷமாக கருதப்படும் பீதோவன், காது கேளாமை குறை உடையவர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. ஆனாலும் அவரது இசை வடிவங்கள் சாகா வரம் பெற்றவை. தன் குறையை மறைத்து, தன் இசையால் உலகையே மயக்க வைத்தவர் பீதோவன்.

இந்த நிலையில், ஒரு புதுமை சாதனையை நெல்லையைச் சேர்ந்த தாயும், மகளும் மும்பையில் நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சேர்ந்தவர் பி.டி.பாரதி. இவர் மனைவி ஜூடித் ஜெஸ்லின். வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜூடித்துக்கு வயது 41.

பாரதி பல வருடங்களுக்கு முன்பே மும்பைக்கு வந்து விட்டார். அங்கு பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1988ல் ஜூடித்தை அவர் மணந்தார். இருவரும் மும்பையில் வாழ்க்கையை ஆரம்பித்தனர். இவர்களின் செல்ல மகள் பவிகா. 19 வயதாகும் பவிகாவுக்கு, சிறு வயதிலேயே பெரிய டாக்டராக வேண்டும் என்ற ஆசை.

மகளின் விருப்பத்தை ஊக்குவித்த பெற்றோர் அதற்கான திசையில் அவரை வளர்த்து வந்தனர். கூடவே, அவருக்கு இசை, ஓவியம், பாட்டு ஆகியவற்றிலும் பயிற்சி கொடுத்தனர். கீ போர்டில் பவிகா பெரும் நிபுணியானார். பாடுவதிலும் பட்டையைக் கிளப்புவார்.

இபப்டியாக வளர்ந்து வந்த பவிகா, பிளஸ்-2 தேர்வில் மும்பையிலேயே
15-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். பிளஸ்-2 முடித்த பிறகு, பவிகாவுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

அவரது குடும்ப நண்பர் ஒருவர், ஏன் பைலட் பயிற்சி பெறக் கூடாது என பவிகாவை கேட்டார். அது பவிகாவுக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. பல பைலட்களின் சாதனைகள், வாழ்க்கை வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கவே பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது பவிகாவுக்கு.

இதையடுத்து டாக்டர் கனவைக் கலைத்த பவிகா, பைலட் கனவுக்குள் புகுந்தார். அதற்கு அவரது தந்தையும், தாயும் பச்ைசக் கொடி காட்டினர்.

பைலட் ஆவதற்கு மிகுந்த தைரியம் தேவை, பயிற்சி விமானத்தை செலுத்தும் போது பயம் ஏற்பட்டால் அதை கைகழுவி விட்டு மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று ஜூடித் தெரிவித்து இருந்தார். எனவே, மருத்துவ புத்தகத்தோடு மும்பையில் உள்ள பைலட் பயிற்சி மையத்துக்கு பவிகா சென்றார். பைலட் ஆகலாம் என்ற தைரியம் வந்ததும் மருத்துவத்தை உதறினார்.

பயிற்சி முடித்த அவர், கிங்பிஷர் நிறுவனத்தில் சேர்ந்தார். பல்வேறு பயிற்சிகளை முடித்த பிறகு கோ பைலட் பதவி கிடைத்தது. தற்போது அவர் சென்னையில் இருந்து இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறார்.

இங்குதான் இன்னொரு வினோதம் நடந்தது. மகளுக்கு துணையாக பயிற்சிக்கு சென்ற ஜூடித்திடம் சிலர் நீங்களும் கூட பயிற்சி பெறலாம் என கூற ஜூடித்துக்கும் ஒரு ஆர்வம் வந்தது.

இதையடுத்து மகள் படித்த பள்ளியிலேயே அவரும் சேர்ந்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்த பைலட் பயிற்சிக்குச் சென்றனர். புலி எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்களே. அதுபோல ஒரு வருடத்தில் ஜூடித் பயிற்சியை முடித்தார், ஆனால் 6 மாதத்தில் முடித்து அசத்தினார் பவிகா.

முதல் அட்டம்ப்ட்டிலேயே பவிகாவுக்கு கோ பைலட் வேலை கிடைக்க, 3 முறை முயற்சித்த பின்னர் 4வது முயற்சியில் கோ பைலட் வேலை கிடைத்தது ஜூடித்துக்கு.

இப்போது பவிகா கிங் பிஷரிலும், ஜூடித் டெக்கான்நிறுவனத்திலும் கோ பைலட்டாக சேர்ந்துள்ளனர்.

இன்று தனது பறக்கும் வாழ்க்கையை தொடங்குகிறார் ஜூடித். சென்னை-பெங்களூர் விமானத்தை அவர் முதன் முதலாக இயக்குகிறார்

இதுகுறித்து ஜூடித் கூறுகையில், நான் விமானத்தை இயக்கும் அளவுக்கு முன்னேற்றம் பெறுவதற்கு எனது கணவர் பாரதிதான் காரணம். கவுரவம் பார்க்காமல், பரந்த மனதோடு எனக்காக பல கஷ்டங்களை சகித்துக் கொண்டு நான் விமானியாக மாற ஊக்கப்படுத்தி, நல்ல ஒத்துழைப்பு தந்தார். அதனால் இந்தத் துறையில் நான் எப்படிப்பட்ட முன்னேற்றம் அடைந்தாலும் அது அவரையே சாரும்.

ஒரு பெண்ணுக்கு திருமணத்தோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. கணவனின் ஒத்துழைப்பு இருந்தால் சிகரங்களை பெண்கள் தொட முடியும். அதற்கு வயது ஒரு தடையல்ல. இதற்கு நான் ஒரு உதாரணம்.

விமானப் பயிற்சி பெறுவதற்கு முன்பு நன்றாக சிந்தித்துக் கொள்ள வேண்டும். ரூ.40 லட்சம் வரை தற்போது செலவாகிறது. இவ்வளவு செலவழித்து விட்டு விமானியாக முடியவில்லை என்றால், அத்தனையும் வீணாகிவிடும். தற்போது 3 ஆயிரம் பேர் பைலட் ஆக முடியாமல் இருக்கிறார்கள் என்றார் ஜூடித்.

ஜூடித்துக்கு ஒரே ஒரு ஆசைதான். அதாவது தனது மகள் பைலட்டாக இருக்கும் விமானத்தில் தான் கோ பைலட்டாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் தற்போது அதற்கு அனுமதி இல்லை. ரத்த சம்பந்த உறவுடையவர்கள் சேர்ந்து பணியாற்ற முடியாதாம். ஆனால் இதை எப்படியாவது சாதிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜூடித்.

பறக்க துணிந்தவருக்கு இந்த சாதனையையும் படைக்கத் தெரியாதா என்ன?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X