For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடித் தள்ளுபடியும்..'தேர்தல் தள்ளுபடியும்'-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, கீழே கொட்ட வேண்டிய தரமற்ற அரிசியை மக்களுக்கு 1 ரூபாய் விலையில், 'ஆடி தள்ளுபடி' போல் முதல்வர் கருணாநிதி கொடுக்கிறார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தல் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, மக்கள் மத்தியில் தனக்கு உள்ள அவப்பெயரை மறைக்க, கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

மேற்படி ஒரு ரூபாய் அரிசி பழுப்பு நிறத்தில் இருப்பதாகவும், வண்டுகள் இருப்பதாகவும் பொதுமக்கள் பரவலாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

துணிக்கடைகளில், புடவை, வேட்டி போன்றவற்றில் ஏதாவது ஒரு சிறிய பழுது ஏற்பட்டிருந்தால் அதை குறைந்த விலைக்கு சலுகை விலையில் விற்பது வழக்கம்.

அந்த அடிப்படையில், கீழே கொட்ட வேண்டிய அரிசியை மக்களுக்கு குறைந்த விலைக்கு, ஆடி தள்ளுபடி' போல் தேர்தல் தள்ளுபடி'யாக கருணாநிதி கொடுக்கிறாரோ என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மேலும் அக்டோபர் 2ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் 10 வகையான மளிகைப் பொருட்கள், 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று மேலும் ஒரு கவர்ச்சியான போலி அறிவிப்பை வெளியிட்டார்.

மேற்படி அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால், 2002-ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்கள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அப்பகுதியிலுள்ள சுமார் 10 லட்சம் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் எனது அரசால் வினியோகிக்கப்பட்டன.

அந்தப் பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. பின்னர் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்புடன் அந்தப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இது ஒரு நாள் நிகழ்ச்சி.

தற்போது, அறிவித்துள்ளது ஒரு தொடர் திட்டம். இந்தத் திட்டத்தின்படி 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காக, 1 கோடியே 86 லட்சம் பைகளில், தலா 10 பொட்டலங்கள் வீதம், மாதா மாதம் போடுவது என்பது நடைமுறையில் இயலாத காரியம்.

மேற்படி 50 ரூபாய்க்கான பொருட்களை வைத்து, மாதம் முழுவதும் ஒரு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியுமா என்பதை கருணாநிதி எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைவாசி கட்டுப் படுத்தப்பட வில்லையா?' என்ற தலைப்பில் வீண் செலவு செய்து அரசு விளம்பரத்தை 12.9.2008 அன்று பத்திரிக்கைகளி்ல் வெளியிட்டிருக்கிறார்.

அதில், 2007ம் ஆண்டு சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின்படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, கோதுமை மாவு, மைதா, ரவை போன்ற பொருட்கள், ஒரு கிலோ வீதம், நியாய விலைக் கடைகளின் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் பல மாதங்கள் மேற்படி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, இது போன்ற திட்டங்களை எல்லாம் அறிவித்து உள்ளார். சாதாரண ஏழை, எளிய, மக்கள் இந்த நாடகத்தை இனியும் நம்பத் தயாராக இல்லை. வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X