சசிகலாவுக்கு எதிரான பொருளாதார குற்ற வழக்கு தள்ளுபடி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது வருமான வரித்துறையின், அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அன்னியச் செலாவாணி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 6.5.1996ம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சசிகலாவுக்கு மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் 10.05.96 அன்று விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜராக வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
இதற்கு சசிகலா தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 40(3)ன் கீழ் சசிகலாவின் மீது எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சசிகலா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் இறுதிகட்ட விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, சசிகலாவுக்கு எதிராக மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.
அவர் அளித்த தீர்ப்பில், மத்திய அமலாக்கப் பிரிவானது மீண்டும் 30.05.96 அன்று சம்மனை அனுப்பியுள்ளது. அதனை ஏற்று 20.06.96 அன்று சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அந்த வழக்கில் சசிகலா கைதும் செய்யப்பட்டுள்ளார். எனவே சசிகலா சம்மனை மதிக்கவில்லை என்று கோரி வழக்கு தொடர்ந்தது ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.