சென்னையில் காற்று, இடியுடன் மழை - மின்னல் தாக்கி பெண் பலி
சென்னை: சென்னை நகரம் மற்றும் புறநகர்களில் நேற்று மாலை பலத்த சூறைக் காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்தது. மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உடல் கருகி உயிரிழந்தார்.
சென்னையில் நேற்று காலை நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மாலைக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.
பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது. கூடவே இடியும், மின்னலும் மக்களை மிரட்டியது. படு வேகமாக கொட்டத் தொடங்கிய மழை சற்றும் வேகம் குறையாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு விளாசித் தள்ளியது.
நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த இந்த மழையால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. நகரின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் ஆறுகள் போல மாறின
பெண் பலி...
தாம்பரம் அருகே இரும்புலியூர் ரயில்வே பாலத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கலா என்ற பெண் மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்து போனார்.
அவரது கணவரும் படுகாயமடைந்தார். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து போய் விட்டது.
தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் ஜி.எஸ்.டி. சாலையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரப் பகுதியை விட புறநகர்ப் பகுதிகளில்தான் மழை மிரட்டி விட்டது.