For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வெட்டு: புதுக்கோட்டையில் 50 கிராமங்களில் சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

Pudukottai
புதுக்கோட்டை: மின்வெட்டை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 கிராமங்களில் சாலையில் குறுக்கே மரங்கள், பாறாங்களை போட்டு தடைகளை ஏற்படுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதனால் அந்த மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் நிலவி வரும் மின்வெட்டால் விவசாயம், தொழிற்சாலை உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மின்வெட்டு அவ்வப்போது விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட தொடர்ந்து மின்வெட்டுஅமலில் இருந்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி மற்றும் அதை சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்கள் ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே உள்ளன. இதைக் கொண்டுதான் அங்கு விவசாயம் நடைபெறுகிறது.

ஆனால், தொடர் மின்வெட்டு காரணமாக இந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்களையும் காக்க முடியாமல், புதிய சாகுபடியும் தொடங்க முடியாமல் விவசாயிகள் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த 20 கிராம மக்கள் கடந்த ஒன்றாம் தேதியன்று மறியல் போராட்டம் செய்தனர். மக்கள் பிரதிநிதிகளுடன் கலெக்டர் முத்துவீரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் உறுதியளித்தபடி மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு கொடுக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 2 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதனால் கரும்பு, சோளம், கடலை போன்ற பயிர்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து மேற்று காலை மாங்காடு அருகே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை, அறந்தாங்கி - பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை - கறம்பக்குடி ஆகிய சாலையில் மரங்களை வெட்டி குறுக்கே போட்டும், பாறாங்கற்களை போட்டும் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் மற்ற கிராமங்களிலும் பரவியது. அவர்களும் சாலையில் தடைகளை ஏற்படுத்தி சாலை மறியலில் குதித்தனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே ஸ்தம்பித்தன. காலை 7 மணிக்கு கீரமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ்களை தடுத்து நிறுத்தினர். மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று பணியாளர்களை வெளியேற்றி, அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஆவணத்தான்கோட்டை துணை மின்நிலையத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். மக்களின் பிரச்சனைகளை எம்எல்ஏ ராஜசேகரன் கண்டுகொள்ளவில்லை என்று கூறி எம்எல்ஏ அலுவலகத்தையும் பூட்டினர்.

டாஸ்மாக் கடைக்கும் பூட்டு

குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும்போது டாஸ்மாக் விற்பனை அவசியமா என்று வாக்குவாதம் செய்த மக்கள் கொத்தமங்கலத்தில் 2 டாஸ்மாக் கடைகளை திறக்கவிடாமல் செய்தனர்.

ஒரே நேரத்தில் பல கிராமங்களில் சாலை மறியல், பூட்டு போராட்டம் என்ரு மக்கள் குதித்ததால் போலீஸார் செய்வதறியாது திணறினர். பல பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவங்களால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கறம்பக்குடி, மதுரை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X