For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வரின் உறவினர் என சிபாரிசு செய்தால் ஏற்காதீர்கள்!- செயலாளர் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வரின் உறவினர் என்று சொல்லிக் கொண்டு யாராவது சிபாரிசு செய்தால் அதை அதிகாரிகள் ஏற்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வரின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

முதல்வர் கருணாநிதியின் உறவினர் என்றும், முதல்வரின் நெருங்கிய உறவினர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படத்தை இணைத்து லெட்டர்பேட் மற்றும் விசிட்டிங் கார்டு போன்றவைகளை தயார் செய்து, அவற்றை அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் கொண்டு போய் நேரில் கொடுத்தோ, அல்லது தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டோ ஒரு சிலர் சிபாரிசுகளை பரிந்துரைகளைச் செய்வதாக முதல்வருக்கு தொடர்ந்து செய்தி கிடைத்து வருகிறது.

அதுபோல், வரக்கூடிய எந்த பரிந்துரைகளையும், சிபாரிசுகளையும் யாரும் ஏற்கத் தேவையில்லை என்று முதல்வர் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, முதல்வரின் நெருங்கிய உறவினர் என்று கூறிக் கொண்டு, நேரிலோ, தொலைபேசியிலோ எந்த அதிகாரியிடம் பரிந்துரைகள் வந்தாலும் அதனை ஏற்கத் தேவையில்லை என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அத்துடன் அந்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

என் பெயரை பயன்படுத்தி மிரட்டல்-அழகிரி:

அதே போல தனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்தல், மிரட்டுதல் போன்ற செய்திகளில் ஈடுபடுவதாக தனது கவனத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் இச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தன்னிடம் புகார் செய்யலாம் என்றும் முதல்வரின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் அழகிரியால் மதுரை என்ன பாடுபடுகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளது. இந் நிலையில் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில காலமாக என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிலம் வாங்குதல், விற்பனை செய்தல், கடை, வீடு காலி செய்தல், பணம் கொடுக்கல், வாங்கல், ஆக்கிரமிப்பு போன்ற சமூக விரோதச் செயல்களிலும், இன்னும் இது போன்ற பல பிரச்னைகளிலும் என் பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற நாகரீகமற்ற செயல்களில் நான் எப்போதும் ஈடுபட்டதும், பரிந்துரை செய்ததும் கிடையாது.

என் இத்தனையாண்டு கால பொது வாழ்வில் திமுகவினருக்கும், ஏழை எளிய மக்களுக்கும் இன்று மட்டுமல்லாது என்றென்றும் உதவிகள் மட்டுமே செய்து வருகிறேன். பிறரை துன்புறுத்தி இன்னல்கள் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம், என்றைக்கும் எனக்கு இருந்ததுமில்லை; இனி வரப்போவதுமில்லை.

சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கொடைக்கானல் மற்றும் பல இடங்களில் மதுரையில் உள்ளவர்களும், அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களும், 'மதுரை அண்ணன்' சம்பந்தப்பட்டுள்ளார் என்று என் பெயரை தவறாக பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்தல், மிரட்டுதல் போன்ற செய்திகள் என் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

என் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை அருகிலுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கவும்.

மேலும், மு.க.அழகிரி, 25-இ, சத்ய சாயி நகர், மதுரை-625 003 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் அழகிரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X