For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த தண்டனையையும் ஏற்க தயார்-கண்ணப்பன்

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் பின் வாங்க போவதில்லை. ஈழத் தமிழர்களுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மதிமுக அவைத் தலைவரும் எம்எல்ஏவுமான கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் கைது செய்யப்பட்டார்.

அப்போது கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடக்கும் தமிழின படுகொலையை பற்றி விளக்குவதற்காக மதிமுக சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் வைகோவும் நானும் பேசினோம். அதற்காக எங்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

விடுதலை புலிகளுக்கு தார்மிக ஆதரவு தருவது தவறில்லை. ஆயுதம் தந்தாலும், பண உதவி செய்தாலும்தான் தவறு.

தார்மிக ஆதரவு தவறில்லை:

கடந்த 2002-03லும் இதே பிரச்சனை வந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தார்மிக ஆதரவு தருவது தவறில்லை என்று மத்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கூறினார். உச்ச நீதிமன்றமும் தார்மிக ஆதரவளிப்பது தவறில்லை என்று கூறியது.

கடந்த 35 ஆண்டுகளாக காந்திய வழியில் தமிழர்கள் போராடி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக தமிழினத்தை காக்க ஆயுதம் ஏந்தி விடுதலை புலிகள் போராடி வருகின்றனர். சிங்கள ராணுவம் தமிழினத்தை கூண்டோடு அழிக்க முயற்சிக்கிறது.

இலங்கையில் வசிக்கும் அப்பாவி தமிழர்களை அங்குள்ள ராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர். இலங்கையில் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் சுதந்திரமாக இருக்க முடிவதில்லை.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசோ செவி சாய்க்காமல் மறைமுகமாக ராணுவ தளவாடங்களையும், பண உதவியும், ஆயுத பயிற்சியும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

தமிழர்களை காப்பது நமது கடமை. நமது வரிப்பணத்தில் இலங்கைக்கு ராணுவ உதவி, தொழில்நுடப் உதவிகளை மத்திய அரசு செய்கிறது. இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டை தடுக்க வேண்டும் என்று 9 மாதங்களுக்கு முன் சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். இதுகுறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவித்தது.

அதன்பிறகு செஞ்சோலையில் 60க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியே சட்டசபையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாகவும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த இரண்டுக்கும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. மாநில அரசும் இதுதொடர்பாக எதுவும் கேட்கவில்லை. இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மாடாடோம் என்று கூறிவிட்டு அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

இலங்கையில் 250க்கும் மேற்பட்ட இந்திய பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதற்காக 38 முறை பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். 9 முறை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். நார்வே நாட்டு தூதுக்குழு மூலம் உணவு, உடை மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தர வேண்டும்.

முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா முடிவு குறித்து பிரதமர் கவலை தெரிவிக்கிறார். ஆனால் போரை நிறுத்துமாறு ஆணித்தரமாக அவர் கூறவில்லை.

பின்வாங்க மாட்டோம்:

ஈழத் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழர்கள் அழிய வேண்டும் என்ற நோக்கத்திலும் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் பின் வாங்க போவதில்லை. ஈழத் தமிழர்களுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும், ஏற்றுக்கொள்வோம். அடக்கு முறைக்கு பயப்படமாட்டேன்.

ஆட்சியை காப்பாற்ற கைது:

தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் திமுக ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி எங்களை கைது செய்துள்ளார்.

ஈழத் தமிழர்களை விட ஆட்சியே பெரிது என்று தமிழக முதல்வர் நினைக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. இப்போது கைது பிரச்சனையிலும் மதிமுகவுக்குத்தான் வெற்றி என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X