For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்க். கம்யூனிஸ்டுக்கு கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சட்டசபையில் மின் வெட்டு பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி தரப்படவில்லையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

கடந்த அதிமுக ஆட்சியிலே சட்டப்பேரவையின் எதிர்க் கட்சிகளுக்கு அதிலும் குறிப்பாக திமுகவுக்கு அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளையும், காட்டப்பட்ட மரியாதைகளையும், கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் பண்பாடுகளையும் சட்டமன்ற நடவடிக்கை ஏடுகளில் அச்சியற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துப் படித்தாலே போதும் அந்த அவலட்சணங்களைப் புரிந்து கொள்ளலாம்.

அலுவல் ஆய்வுக் குழு என ஒன்று உண்டு. அக்குழுவில் அவையில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இடம் பெறுவர். அந்த குழுவினர் கூடி, சட்டமன்ற அலுவல்களைத் தேதி வாரியாகத் தயாரிப்பார்கள். அக் குழுவில் முதல்வரும் கலந்து கொண்டு கருத்து கூறுவார்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவும், அக்குழுவின் கூட்டங்களில் அதிமுக முதல்வர்கள் யாருமே இதுவரை கலந்து கொண்டதில்லை. ஆனால், அக்குழுவின் எல்லா கூட்டங்களிலும் ஒன்றிண்டைத் தவிர முதல்வர் என்ற முறையில் நான் கலந்து கொள்ளாமல் இருந்தது இல்லை.

ஒவ்வொரு அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலும், அந்தக் கூட்டத்தொடரில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த விஷயங்களின் மீது விவாதம் நடத்துவது என்று முடிவு எடுத்து அவ்வாறு எடுத்த முடிவின்படியே விவாதங்கள் நடப்பது, சட்டப் பேரவை வழக்கமாக இருந்து வந்துள்ளது.

தவிர்க்க முடியாத சூழல் என்றால் மட்டுமே அந்த நிகழ்ச்சி நிரல், அவைத் தலைவர், அவை முன்னவர், எதிர்க்கட்சித் தலைவர்களை கலந்து கொண்டு மாற்றி அமைக்கப்படுவதும் உண்டு.

அந்த முறைப்படி தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கடந்த 12ம் தேதி மின்சார வெட்டு பற்றிய கவன ஈர்ப்புத்தீர் மானத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவதென்றும், மின் துறை அமைச்சர் பதில் சொல்வதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அதே நாளில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் 12ம் தேதி அன்று விடியற்காலை 3.30 மணியளவில் நான் எழுந்து அந்த தீர்மானத்தை நானே என் கைப்பட விடிய விடிய எழுதினேன்.

4.30 மணியளவில் மின்துறை அமைச்சரை எழுப்பி, அனைத்து எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து, இலங்கை தமிழர் பிரச்சினைக்கான அரசு தீர்மானம் அன்றைய தினமே அவையிலே எடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் தெரிவிக்கச் செய்தேன்.

அவரும் அவ்வாறே ஒவ்வொரு தலைவருடன் பேசி, ஒப்புதல் பெற்றதை அந்தந்த கட்சிகளின் தலைவர்களே நன்கு அறிவார்கள். அப்போது கூட இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்மானம் அவையிலே விரைவாக முடிந்து விட்டால், தொடர்ந்து மின்துறை பற்றி விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற அளவிலே தான் இருந்தோம்.

ஆனால் இலங்கை தமிழருக்கான தீர்மானத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு அதிகமாகவே நான் உட்பட அனைவருமே உரையாற்றியதால் நண்பகல் உணவு வேளை விரையிலே நீண்டுவிட்டது காலம்.

எனவே அந்த நாளில் மின்சாரம் பற்றிய விவாதத்தை எடுத்துக் கொண்டு எல்லோரும் கருத்தறிவிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகத்தில் இன்று இலங்கை தமிழர் பிரச்சினை தீர்மானத்துடன் அதாவது இத்துடன் முடித்து விடலாமே, முதன் முதலாக எல்லோரும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோமே என்ற பெருமிதத்தில் மின்சாரம் விவாதம்' நாளைக்கு வைத்து கொள்ளலாமே என்று அவை தலைவரிடமும், எதிர்க் கட்சித் துணைத் தலைவரிடமும் "ஜாடை'' செய்து கேட்டேன். அவர்களும் ஒப்புதல் அளிப்பது போல தலை அசைத்தார்கள்.

அதற்குள் அதிமுக சார்பில் செங்கோட்டையன் எழுந்து மின்சாரம் குறித்த விவாதம் பற்றிய பிரச்சினையை எழுப்ப, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பாலபாரதியும் மின்சாரம் பற்றிய விவாதத்தை அன்றைக்கே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது நமது மின்சாரத்துறை அமைச்சரும் எழுந்து, அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் ஆட்சேபணை இல்லையென்றால், பேரவைத் தலைவர் அனுமதித்தால், மின்சாரம் பற்றி விவாதித்தால், இப்போதே பதில் சொல்ல அரசு தயாராக உள்ளது என்றார்.

அப்போது மணி 1.15 ஆகிவிட்டதால், மறுநாள் 13ம் தேதி மின்சாரம் குறித்த விவாதம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுகவும் மின்சாரம் பற்றிய விவாதத்தை உடனே எடுத்துக் கொள்ளாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இது தான் 12ம் தேதி நடந்தது. ஆனால் ஏதோ பயந்து கொண்டு மின்சார' விவாதத்தை நடத்தாமல் ஓடி விட்டதைப் போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தன. அதுமட்டுமல்ல; மின்சாரப் பற்றாக்குறை பற்றிய அந்த விவாதம் மறுநாள் 13ம் தேதியன்று நடைபெற்று தக்க புள்ளி விபரங்களுடன் மின்துறை அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளார்.

ஆனால் நான் வியப்படையும் வண்ணம் ஒரு கேலிச் சித்திரம், 14ம் தேதி 'தீக்கதிர்' மார்க்சிஸ்ட் கட்சி ஏட்டில்;

"ஓ; அப்படியா?'' எனும் தலைப்பிட்ட ஒரு கேலிச் சித்திரம்-

"மின் வெட்டுக் குறித்துப் பேச அனுமதி மறுப்பு- (செய்தி)''

"மின் வெட்டு குறித்துத் தான் வீட்டுக்கு வீடு பேசுறாங்களே, சட்டசபையிலும் பேசணுமா? இது என்ன நியாயம்? என்று எழுதி வெளியிட்டுள்ளார்.

விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதா? அல்லது விவாதம், தவிர்க்கப்படாத சூழ்நிலையில் தள்ளி வைக்கப்பட்டதா? எதிர்க்கட்சி என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், என்று ஆகிவிட்டால், மற்ற பத்திகைகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்? என்று தான் வேதனையுடன் கேட்கத் தோன்றுகிறது.

அது மாத்திரமல்ல 13ம் தேதி மின்சாரம் பற்றிய விவாதம் நடைபெற்ற போது கூட, நான் அவையிலே இல்லாத நேரத்தில், சட்டக் கல்லூரி பற்றிய விவாதத்தின் போது, பிரதான எதிர்க் கட்சியாக அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அறிந்து, அய்யோ அவர்கள் மின்சாரம் பற்றி விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்டகாரணத்தால்,

மின்சார விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே என்று எண்ணி நானே தொலைபேசியில் எதிர் கட்சி துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து, அது கிடைக்காத காரணத்தால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஆகிய 3 அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அதிமுகவினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன்.

மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று அவர்களை எல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலே அழைப்பு விடுக்கவும் கேட்டுக்கொண்டேன்.

அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார். ஆனால் இத்தனைக்கும் பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்கு வரவும் இல்லை, மின்சார விவாதத்திலே கலந்து கொள்ளவும் இல்லை. ஆனால் அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த அந்த பண்பாட்டுடன் நாம் நடந்து கொண்டோம் என்ற மன ஆறுதல் எனக்கு கிடைத்தது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X