For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேதுவை எதிர்ப்பவர்கள் இலங்கையின் ஆதரவாளர்கள்-கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இவர்கள் கூட தமிழ்நாட்டில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பால சாலைப் பணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவதென மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பொதுவாக தேர்தல் நேரத்து வாக்குறுதிகளெல்லாம் பறந்து போய்விடும். இது பறக்கும் சாலையாக இருந்தும் கூட, 'பறந்து போகாமல்' நீங்கள் எல்லாம் பரவசமடைகிற அளவுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக அரசு அமைந்த ஒரு மாத காலத்துக்குள்ளாக, அதாவது 5.6.2006 அன்று பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி கடிசம் எழுதினேன்.

தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிற இதுபோன்ற விண்ணப்பங்களை, ஒன்றிரண்டு தவிர, மற்றவற்றையெல்லாம் ஏற்று ஒப்புதல் அளித்து, நிறைவேற்றி வைக்கின்ற மன்மோகன் சிங் இந்த கோரிக்கையையும் ஏற்றதன் விளைவாக இன்றைய தினம் ரூ. 1,600 கோடியில் இந்த பாலம் அமைக்கும் திட்டம் அமலாகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணைப்புப் பாலம் இருக்கின்ற காரணத்தால் தான், இங்கே ஒரு பறக்கும் பாலத்தை நம்மால் உருவாக்க முடிகிறது.

இதையெல்லாம்விட மிகப்பெரிய பாலம், தென்னகத்தை வளப்படுத்தக் கூடிய பாலம், வாணிபத்தை விரிவாக்கச் செய்யக்கூடிய பாலம், எதிர்காலத் தமிழர்களுடைய வாழ்வுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய பாலம், அண்ணாவால் "எழுச்சி நாள்'' கொண்டாடப்பட்டு, அதற்கு முன்பே காமராஜரால் சுட்டிக் காட்டப்பட்டு, தமிழக ஆன்றோர், சான்றோர், புலவர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று அத்தனை பேரும் ஆதரவு தந்து கட்டப்பட வேண்டுமென்று எண்ணிய பாலம் தான், சேது சமுத்திரப் பாலம்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் ஒருவேளை இலங்கையிலே உள்ள அரசுக்கு அது சங்கடமாக இருக்கலாம், ஆனால் நமது எதிர்கால வாழ்வுக்கு ஒரு இன்பப் புதையலாக அந்த திட்டம் நிறைவேறக் கூடிய திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் (அதிமுக) கொடி தூக்கி சேது சமுத்திர திட்டம் வேண்டாம் என்று முழங்குவதை காணுகின்றோம்.

கொடி தூக்கி வேண்டாமென்று சொல்வது மாத்திரமல்ல, உச்ச நீதிமன்றத்திற்கே சென்று சேது சமுத்திர திட்டத்தை கைவிட வேண்டுமென்று வாதாடுகின்ற நல்லவர்கள் (ஜெயலலிதா, சுவாமி) எல்லாம் கூட இன்றைக்கு தமிழ்நாட்டிலே கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா, காமராஜர் மற்ற பெரும் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட, நிறைவேற்றப்பட வேண்டுமென்று அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்ட ஒரு திட்டத்துக்கு இன்றைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஒரு சில கட்சிகளால், இலங்கையிலே உள்ள அரசுக்கு ஆதரவாகச் செய்யப்படுகிறது, என்றாலுங் கூட நாம் இங்குள்ள தமிழர்களை காப்பாற்ற, நம்முடைய போக்குவரத்து, நம்முடைய உலகத் தொடர்பு, இவைகளுக்கெல்லாம் உயர்வளிக்க இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

அந்த திட்டத்தை எடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டி.ஆர். பாலு, இதிலே எவ்வளவு திடமான, உறுதியான, உத்வேகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த திட்டம் ஒரு அறைகூவல். அந்த அறைகூவலிலே தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவதற்கு நம்முடைய அன்புக்குரிய, மதிப்புக்குரிய, நம்முடைய உள்ளமெல்லாம் குடி கொண்டிருக்கின்ற பண்பாளர், மத்தியில் இன்றைக்கு ஒளி விளக்காக திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஆட்சியின் பிரதமர் மன்மோகன் சிங் மனம் கனிந்து அந்த திட்டம் நிறைவேறுவதற்கு உறுதியோடு நின்று ஒத்துழைத்து அந்த திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பாராட்டு:

நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,

நம் நாட்டில் உலகத் தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், போக்குவரத்து வசதிகளும், உலகத் தரத்திலான துறைமுகங்களும், ரயில்வே வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத தேவைகள்.

தற்போது இங்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் மேம்பால சாலை, தங்க நாற்கரச் சாலை வழியாக, சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, விரைவாக கொண்டு செல்லப்படும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் காரணமாக, கூவம் நதியும் அழகாக மாறும்.

இதுபோன்ற திட்டங்களில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு மிகவும் அக்கறை காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. நமது சாலை திட்டங்களில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு புகுத்திய புதுமைகளுக்காக அவரை பாராட்டுகிறேன்.

மத்திய அரசும், கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும் இணைந்து பணியாற்றுவதால் தமிழக மக்களுக்கு மேலும் பல்வேறு வசதிகள் கிடைப்பது உறுதி.

தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் கருணாநிதி, டி.ஆர்.பாலு ஆகியோரின் சிறப்பான பணிகளுக்கு ஒரு உதாரணம். இவர்களது வழிகாட்டுதல் தமிழகம், இன்னும் பல நற் பயன்களை அடையும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X