For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமங்கலத்தில் 88.89 சதவீத வாக்குகள் பதிவு - புதிய சாதனை

By Sridhar L
Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 88.89 சதவீத வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்து தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு நேற்று மிக மிக அமைதியான முறையில் இடைத் தேர்தல் நடந்தது. பெரும் வன்முறை மூளலாம் என எதிர்பார்த்து துணை ராணுவம் வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு யாருமே வேலை வைக்கவில்லை.

மேலும், திருமங்கலம் தொகுதி வாக்காளர்களும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக அதிகமான அளவில் வந்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

திமுகவின் லதா அதியமான், அதிமுகவின் முத்துராமலிங்கம், தேமுதிகவின் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பத்மநாபன் உள்பட 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த நரேஷ்குப்தா கூறுகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்ததால் ஓரிரு சம்பவங்களைத் தவிர மொத்தத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது என்றார்.

பெண்கள் ஓட்டு அதிகம் ...

திருமங்கலம் தொகுதி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், மொத்தம் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 வாக்காளர்களில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 369 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது வாக்குப்பதிவு சதவீதம் 88.89 சதவீதமாகும்.

ஆண் வாக்காளர்களில் 67 ஆயிரத்து 748 பேரும், பெண்களில் 79 ஆயிரத்து 621 பேரும் வாக்களித்துள்ளனர்.

12ம் தேதி காலை வாக்குகள் எண்ணப்படும். முற்பகல் 11 மணியளவில் முடிவு தெரிய வாய்ப்புண்டு என்றார்.

சாதனை படைத்து விட்டனர் ...

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறுகையில், இது சாதனை அளவான வாக்குப் பதிவு சதவீதம் ஆகும். எனக்குத் தெரிந்து தமிழகத்தி்ல் வேறு ஏதாவது தொகுதியில் இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். திருமங்கலம் வாக்காளர்கள் சாதனை படைத்து விட்டனர்.

இந்தத் தேர்தலின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் இனி வரும் எந்தத் தேர்தலிலும் தேர்தல் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வெளியூர்க்காரர்கள் பிரசாரம் முடிந்தவுடனேயே தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தோம். இருப்பினும் இன்றும் (நேற்று) பலர் தொகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக புகார்கள் வந்தன. அவர்களை வெளியேற்றியும், திரும்பத் திரும்ப உள்ளே வந்து கொண்டுதான் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களால் வாக்குச் சாவடிகளில் நுழைய முடியவில்லை. பிரச்சினைகளையும் ஏற்படுத்த முடியவில்லை என்றார்.

53 வெளியூர்க்காரர்கள் கைது ...

வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது தொகுதிக்குள் நுழைய முயன்ற, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத 53 பேர் கைது செய்யப்பட்டதாகவும், வெளியூர்களைச் சேர்ந்த 20 வாகனங்கள் பிடிபட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட வில்லூர் கிராமத்தில், 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தபோது 224 பேர் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களை மட்டும் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் டோக்கன் தரப்பட்டது. பின்னர் அனைவரும் இரவு ஏழே முக்கால் மணி வரை வாக்களித்தனர்.

குப்தாவை பீதிக்குள்ளாக்கிய டீக்கடை முருகன் ..

நரேஷ்குப்தா, திருமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டு கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காயத்துடன், ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் அங்கு வந்தார்.

அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நரேஷ் குப்தா வேகமாக வெளியே வந்தார். என்ன, ஏது என்று விசாரி்த்தார்.

அதற்கு அவர், எனது பெயர் முருகன். டீக்கடை வைத்துள்ளேன். வலையங்குளம் எனது ஊர். அங்கு சிலர் கள்ள ஓட்டுப் போட வந்தனர். அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.

அப்போது சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை சில திமுகவினர் சரமாரியாக தாக்கி விட்டனர் என்றார்.

இதையடுத்து உடனே போலீஸாரிடம் புகார் கொடுங்கள். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X