For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சி கவிழ்ப்புக்கு பாமக துணை போகாது-ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மீண்டும் ஒரு முறை திமுக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடந்தால் அதை அனுமதிக்க மாட்டோம். அத்தகைய முயற்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணை போகாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. ஈழத் தமிழர்களை காக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், தனித்தனியாக எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், தமிழ்நாட்டின் சார்பில், தமிழர்களின் சார்பில் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளும், போராட்டங்களும் அனைவருடனும் கலந்து பேசி முதல்வரை முன்நிறுத்தி, அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை நான் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி வேறுபாடுகளையும், தனிப்பட்ட கோபதாபங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்பிரச்சினையில் முதல்வர் மேற்கொள்கிற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

அந்த அடிப்படையில் தான் ஜனவரி மாதம் 12ம் தேதி நானும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்.

நீங்கள் என்ன முடிவெடுத்து அறிவித்தாலும், அதன்படி செயல்படத் தயார் என்று எங்கள் மூவரிடமும் முதல்வர் வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான், ஈழத் தமிழர்களை காக்கும் பிரச்சனையில் முதல்வரை நம்பி செயல்படுவோம் என்று தொடர்ந்து அறிக்கைகளில் தெரிவித்து வந்திருக்கிறேன். இதனிடையே, தொல்.திருமாவளவன், அவருக்கே உள்ள துடிப்புடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றாலும், உண்ணாவிரதத்தின் நோக்கம் இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதும், அதன் மூலம் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தச் சென்றேன்.

அவரது உடல்நலம் கருதியும், போராட்டம் திசைமாறிச் செல்கிறது என்பதாலும் அவரைச் சந்தித்த இரண்டு முறையும் உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடும்படி வலியுறுத்தினேன்.

முதல்வரின் சார்பில் மூத்த அமைச்சர் ஒருவரும், நேரில் வந்து வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று தொல்.திருமாவளவனும் தனது உண்ணாவிரதத்தை இப்போது கைவிட்டிருக்கிறார். உண்ணாவிரதத்தின் நோக்கம் எது என்பது தான் முக்கியமே தவிர, உண்ணாவிரத மேடையில் யார் யார் பேசினார்கள் என்பது முக்கியமல்ல.

தேர்தல் கூட்டணி, வெற்றி, தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் உண்ணாவிரத மேடையில் பேசப்பட்டிருக்கிறது என்று முதல்வர் குறை கூறியிருக்கிறார்.

இதுபோன்ற அரசியல் தத்துவப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் உண்ணாவிரத மேடையில் பேசப்பட்டிருப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இப்படியெல்லாம் அரசியலை இணைத்து குழப்புவது இலங்கை தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு வெகு தொலைவு போய்விட்டதாகத் தெரிகிறது என்று முதல்வர் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கும் உடன்பாடானதுதான்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியலை கலப்பதை என்றைக்குமே நான் ஏற்றுக் கொண்டதில்லை. இலங்கை தமிழர் நலன் என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட ஒரு கட்சியைப் பற்றி விமர்சித்து பேசுவதும், அந்த கட்சியினர் கோபம் அடைகின்ற வகையில் உருவப் பொம்மைகளை கொளுத்துவதும், தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவதும் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது.
இப்படியெல்லாம் செயல்படுவது இலங்கை தமிழர் நலனைக் காப்பதற்கு உதவாது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசும்போது நான் தெரிவித்த ஒரு கருத்து பற்றியும் முதல்வர் குறைபட்டிருக்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் இறுதியாக முதல்வர் மீது பழி கூற திட்டமிடப்படுகிறது என்றும், அது நல்ல அரசியல் தந்திரமாக இருக்கலாம் என்றும், ஆனால் அதற்கு தாம் துணைபோக முடியாது என்றும் முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்ணாவிரத மேடையில் நான் வெளியிட்ட அறிவிப்பில் எந்த அரசியல் தந்திரமும் இல்லை. முதல்வர் மீது பழிபோடும் எண்ணமும் இல்லை. அந்த கூட்டத்தில் நான் மிகத் தெளிவாகவே தெரிவித்திருக்கிறேன். முதல்வரைச் சந்திக்க சென்ற எங்களிடம், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுத்து சொல்லுங்கள் என்று முதல்வர் கூறியதைச் சுட்டிக்காட்டி, அப்போது திடீரென்று என் உள்ளத்தில் உதயமான ஒரு போராட்டம் பற்றி குறிப்பிட்டேன்.

எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனாலும் நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் வரவில்லை. அதற்கு இந்திய அரசும் முயற்சிக்கவில்லை. எனவே, இனி நாம் நடத்துகின்ற போராட்டம் நாட்டின் கவனத்தையும், டெல்லியின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டு அந்த போராட்டம் தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

அத்துடன் இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான் என்பதையும் விளக்கினேன். இந்த போராட்டமா? அல்லது வேறு வகையிலான போராட்டமா? என்பது பற்றி முதல்வர் முடிவெடுக்கலாம். அனைவரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

இதற்காக அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை பொதுவான ஒரு இடத்தில் நடத்தலாம் என்றும் யோசனை தெரிவித்தேன். எனவே நான் வெளியிட்ட போராட்ட அறிவிப்பு இறுதியானதல்ல. அது தான் போராட்டம் என்பதல்ல.

தமிழகமே ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு முதல்வசர் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்வதில் ஆட்சி கவிழ்ப்பு தந்திரம் என்று குற்றம் சுமத்துவதில் அர்த்தமே இல்லை. அனைவரது ஆதரவுடனும் நடைபெறுகிற ஒரு போராட்டத்தின் விளைவாக ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடும் என்று முதல்வர் அஞ்சவும் தேவையில்லை.

முதல்வர் சொல்லுகிறபடி அல்லது அவர் அஞ்சுகிறபடி, ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மீண்டும் ஒரு முறை ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடந்தால், அதை அனுமதிக்க மாட்டோம். அத்தகைய முயற்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணை போகாது. ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க முற்படும் அரசை கவிழ்க்க தமிழக மக்களும் துணைபோக மாட்டார்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமெல்லாம் அழிவின் விளம்பில் நின்று கொண்டிருக்கிற ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியிலும், அதற்கான போராட்டத்திலும் முதல்-அமைச்சர் முன்னின்று ஈடுபட வேண்டும். அது எத்தகையப் போராட்டம் என்பதை எல்லோரிடமும் கலந்து பேசி முடிவெடுத்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X