For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 மாத குழந்தைக்கு நவீன கண் ஆபரேஷன்!

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அகர்வால் மருத்துவமனையில் நடந்த அரிய அறுவைச் சிகிச்சையில் நான்கு மாதக் குழந்தையின் வலது கண் புத்துயிர் பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கலா. இத்தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்தபோதே, வலது கண் வீக்கத்துடன் காணப்பட்டது. மேலும் பார்வையும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து குழந்தையுடன் சென்னை வந்தனர் கோவிந்தராஜ் தம்பதியினர்.

அங்கு அகர்வால் கண் மருத்துவமனையில் மகனைக் காட்டினர். குழந்தையை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், குழந்தைக்கு ஆன்டீரியர் ஸ்டேபைலோமா என்ற தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த தொற்று ஏற்படுவோருக்கு கண் பார்வை தெரியாது. கண்ணை இமைக்கக் கூட முடியாது.

குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்ய, வலது கண்ணின் முன் பகுதியை முற்றிலும் நீக்கி விட முடிவு செய்யப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்குப் பதில் செயற்கை மற்றும் இயற்கை உறுப்புகளை மாற்றவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த அறுவைச் சிகிச்சையை, ஆன்டீரியர் செக்மென்ட் டிரான்ஸ்பிளான்டேஷன் எனும் அதி நவீன முறை மூலம் மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சையில், குழந்தையின் கருவிழி, கண்ணின் விழிவெண்படலம், கண்ணின் மணி, லென்ஸ் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டன.

இதற்காக, கருவிழி மற்றும் கண்ணின் விழிவெண்படலம் அடங்கிய பயோலாஜிக்கல் பகுதி மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கண்ணின் மணி, பாப்பா மற்றும் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டு பிராஸ்தடிக் பகுதி உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் அமர் அகர்வால் கூறுகையில்,

குளுட் ஐஓஎல் தொழில் நுட்பம் மூலமாக இது மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம், கடந்த ஆண்டு என்னால் உருவாக்கப்பட்டது.

4 மாத குழந்தைக்கான இந்த அரிய ஆபரேஷன் ஏறக்குறைய 5 மணி நேரம் நடந்தது. குழந்தைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வலியோ, பின் விளைவுகளோ ஏற்படவில்லை.

இப்போது குழந்தைக்கு எந்த அளவுக்கு பார்வை உள்ளது என்பது தெரியவில்லை. இதுவரை குழந்தை வலது கண்ணை உபயோகப்படுத்தாமல் உள்ளது. அதை செயல்படுத்த வைப்பதற்காக குழந்தையின் இடது கண்ணை நாங்கள் தினசரி ஆறு மணி நேரத்திற்கு மூடி வைக்கிறோம். அப்போதுதான் வலது கண்ணை குழந்தை பயன்படுத்தும், பார்வை நரம்புகள் தூண்டப்படும். பார்வைத் திறன் அதிகரிக்கும் என்றார் டாக்டர் அமர் அகர்வால்.

உடன் இருந்த டாக்டர் சூசன் ஜேக்கப் கூறுகையில், குழந்தையின் கண்ணில் பொருத்தப்படவிருந்த விழிவெண்படலம் மற்றும் கருவிழி ஆகியவற்றை தானமாக பெறப்பட்ட கண்ணிலிருந்து மருத்துவமனையில் அகற்றி எடுத்தோம்.

பின்னர் அவற்றுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கண்ணின் மணி, பாப்பா மற்றும் லென்ஸ் ஆகியவற்றை இணைத்து அனைத்தும் ஒன்றாக்கி குழந்தையின் வலது கண்ணில் பொருத்தினோம் என்றார்.

தங்களது குழந்தையின் கண்ணைத் திறந்த டாக்டர் அமர் அகர்வாலே குழந்தைக்குப் பெயர் சூட்ட வேண்டும் என தாயார் கலாவும், தந்தை கோவிந்தராஜும் கேட்டுக் கொண்டதால் குழந்தைக்கு கைலாஷ் என பெயர் சூட்டினார் அமர் அகர்வால்.

தங்களது குழந்தையின் கண்ணில் மேற்கொண்ட இந்த சிகிச்சைக்கான செலவுகளை தர வேண்டாம் என மருத்துவமனை சொல்லி விட்டதாக கூறினார் தந்தை கோவிந்தராஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X