For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

160 பேருக்காக அழும் உலகுக்கு தமிழர்கள் மீது கவலை இல்லையா?-புலிகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: ஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு 160 பேர் இறந்த போது, உலகிந் முன்னணி செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரை விட மிகக் கொடிய அரக்கனைப் போல, காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை- அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கும் விடுதலைப் புலிளை இந்த உலகம் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களுக்காக கவலைப்படவில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வானொலியில் யோகியின் பேச்சு இடம் பெற்றது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல; இந்த உலகத்தின் விருப்பமும் கூட.

நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது, நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம்; எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம், போராடியிருக்கின்றோம்; இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது.

வடமராட்சியில் 'ஆபரேசன் லிபரேசன்' ராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். 'ஜெயசிக்குறு' காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக் கூடாது.

இன்று- உலகம் முழுவதிலும் - ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு- அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும்- செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மைய காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப்படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.

எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன.

இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுத்தப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு லட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாள்தோறும் குண்டுகளை வீசி, 50லிருந்து 60க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாள்தோறும் 100க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப் பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.

ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தலைவர் பிரபாகரனை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன.

அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

இறுதி வரை போராடுவோம்..:

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர்.

கொடிய காட்டுமிராண்டி ராஜபக்சே...:

ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம்.

எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார் யோகி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X