For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிநீர் இணைப்பு தான் தமிழகத்துக்கு நிரந்தர தீர்வு: கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மாநில நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடர்ந்து தேசிய நதி நீர் இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் தமிழகம் போன்ற நதி நீர் பிரச்சினை உள்ள மாநிலங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மாநில நதிநீர் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தென் தமிழகத்தில் உள்ள தாமிரபரணி நதியை கருமேனி மற்றும் நம்பி ஆறுகளுடன் இணைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது.

நேற்று நெல்லை மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவுக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.

வெள்ளநீர் கால்வாய் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ரூ. 369 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே வீடியோ கான்பிரன்சிங் மூலம் இத்திட்டத்தை ரிமோட் மூலம் துவக்கி வைத்தார்.

பின்னர் முதல்வர் ஆற்றிய சிறப்புரையில்,

இன்று, நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளும், நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளும் அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்தான் ஒரு நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும்.

ஆனால் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்; முதற்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்திட மத்திய அரசு நிதியுதவி வழங்கவேண்டும் என 29.5.2007 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 53-வது தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின்படி 19.12.2007 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவின் 54-வது கூட்டத்தில், "மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும்'' எனத் தமிழக அரசின் சார்பில் நான் பேசும்போது வேண்டுகோள் விடுத்தேன்.

அதைத் தொடர்ந்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் தம்பி துரைமுருகனும் அதை வலியுறுத்திப் பேசினார். இந்த வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன உதவித் திட்டத்தின்கீழ், இத்தகைய பணிகளுக்கு நிதியுதவி வழங்க, தேசிய வளர்ச்சிக் குழு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி, தமிழகத்திற்குள் ஓடும் ஆறுகளை இணைக்கும் முதல் திட்டமாக, வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தினை நிறைவேற்றிட முடிவு செய்யப்பட்டது.

அத்திட்டப்படி, காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் திட்டத்தினை நிறைவேற்றிட 24.6.2008 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

அதனை அடுத்து இரண்டாவது திட்டமாக தற்போது, தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கவிழா இன்று (21.2.2009) பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள மூன்றாவது அணைக் கட்டான கன்னடியன் அணைக்கட்டில் வெள்ளத் தடுப்புக் கரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்;

கன்னடியன் கால்வாய் தலைப்பில் இருந்து ஆறரை கிலோ மீட்டர் தொலைவு வரை, கால்வாயின் தண்ணீர் கடத்தும் திறனை அதிகப்படுத்தி, கன்னடியன் கால்வாய் ஆயக்கட்டுதாரர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படும்;

அதன்பின், ஆறரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், எம்.எல்.தேரி வரை, 73 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள நீர் எடுத்துச்செல்லும் கால்வாய் புதிதாக அமைக்கப்படும்; இவ்வாறு கால்வாய்கள் மூலம் கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகிய நதிகள் இணைக்கப்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாத்தான்குளம், திசையன்விளை போன்ற வறண்ட பகுதிகளுக்குத் தாமிரபரணி ஆற்றின் உபரி வெள்ள நீர் கொண்டு செல்லப்படும்;

பாளையங்கோட்டை எனக்கு வாழ்நாளில் நினைவிற்குரிய ஒரு பெரும் இடம். பேரறிஞர் அண்ணா அவர்கள் அங்கே வந்து, என்னைத் தட்டிக் கொடுத்து தைரியமூட்டிய இடம் பாளையங்கோட்டை. பாளையங்கோட்டை சிறைச்சாலை என்னுடைய வாழ்நாளிலே ஒரு முக்கியமான பகுதி.

இத்தகைய முறையில் நாம் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று பேசினாலுங்கூட, மற்ற மாநிலங்கள் அதைப் பற்றி பெருமையாகப் பேசினாலும் கூட, நம்முடைய மாநிலத்திற்குத் தேவையான நீர் வேண்டும் என்று கேட்கிற போது எவ்வளவோ தடங்கல்கள் - ஏறத்தாழ நாற்பது ஐம்பதாண்டு காலமாக காவிரி பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

எனவே தான் இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலங்களில் உள்ள ஆறுகளின் இணைப்பை விட, நமக்கு நாமே நம்முடைய மாநிலத்திற்குள்ளேயே நதிகளை இணைத்து கூடுமான வரை நம்முடைய தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென்ற கருத்தை நான் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிலே எடுத்துரைத்தேன்.

அதையேற்றுக் கொண்டு தற்போது நமக்கு நிதி உதவி அளிப்பதற்கும் மத்திய அரசு முன்வரும் என்று எதிர் பார்த்து, மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியை அதற்காகத் தெரிவித்துக் கொண்டு, அந்த நிதியை விரைவிலே அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருடைய வாழ்த்துகளோடு இந்தத் திட்டத்தை இன்றைக்குத் தொடங்கி வைக்கின்றேன் என்றார் கருணாநிதி.

அதன் பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில்,

முதல்வருக்கு நெல்லை மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் விரைவில் உடல் நலம் பெற்று சட்ட மன்றத்திற்கு வந்து பணிகளிலே கலந்து கொள்ள வேண்டுமென்று நான் அன்போடு வேண்டுகின்றேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X