For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணப்பன் மீது சேடப்பட்டி முத்தையா பாய்ச்சல்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்கட்சி ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறதோ?. கண்ணப்பன் தன்னிலை மறந்து தலைக்கனத்தோடு பேசக் கூடாது என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியுள்ளார்.

கண்ணப்பனைப் போலவே அதிமுகவிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் சேடப்பட்டி. இப்போது திமுக தேர்தல் பணி செயலாளராக உள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஐந்தாறு முறை திடீர் திடீரென அரசியல் பல்டி அடித்துப் பழகிப்போன முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தற்போது மீண்டும் ஒரு அந்தர் பல்டி அடிதுள்ளார்.

முன்னர் அடித்த பல பல்டிகளால் பல் உடைந்து பரிதாபத்திற்குரிய நிலைகளுக்கு ஆளாகி கதியற்று கலங்கி நின்றபோது கட்சியில் இணைத்து கைதூக்கிவிட்ட கருணாநிதியை பற்றி நன்றி மறந்து நாகூசாது விமர்சித்துள்ள கண்ணப்பனின் செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கண்ணப்பனும், நான் முதலான பலரும் கருணாநிதியிடம் அடைக்கலம் தேடி வந்தோம்; அவரும் தாயன்போடு ஆதரித்து அரவணைத்து அரசியலில் தலை நிமிர்ந்து நிற்க செய்துள்ளாரே. அந்த நன்றி உணர்வு கொஞ்சமாவது வேண்டாமா? ஒரு மூன்று வருடம் கூட பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை அல்லவா காட்டியுள்ளார் கண்ணப்பன்.

அதிமுகவில் தலைகுனிவுக்கும், தாறுமாறான விமர்சனத்துக்கும் ஆளான எத்தனை பேர் இன்று கருணாநிதியின் அன்பு, பாசம் கண்டு மீண்டும் தலைநிமிர்ந்து நின்று உள்ளோம் என்பதை அறிந்து தமிழகத்து அரசியல் நோக்கர்கள் பலரும் இன்று பாராட்டிக் கொண்டிருப்பதை, இதுவரை இதே கண்ணப்பனே எத்தனை முறை வெளிப்படையாகப் பேசினார் என்பது பலருக்கும் தெரியுமே.

தனக்கு பதவி வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் தான் கண்ணப்பனின் தற்போதையை வெளியேற்றம். இப்படி இந்த பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் வெளியேறிவிட்டு பதவி பெற்றுள்ள எங்களை பரிதாபத்திற்குரியவர்கள் என கேலி பேசியுள்ளார்.

மேலும், தன் சமுதாயத்திற்கு என வாரியம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சலுகை என்பன போன்றவை கிடைக்கவில்லை எனத் தற்போது பிதற்றும் கண்ணப்பன் இவை பற்றி எப்போதாவது பேசி இருக்கிறாரா? சட்டமன்றத்தில் கேள்வி கேட்டுள்ளாரா? தனி நபர் தீர்மானம் ஏதேனும் கொடுத்துள்ளாரா?.

எதுவும் செய்யாமல் போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுகிறார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் பேட்டி கொடுக்கிறார் என்பதை எதையும் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் அவரது சமுதாய மக்களே புரிந்து கொள்வர்.

நான் கோடிக்கணக்கிலே வைத்துள்ளேன், கொடுங்கள் பதவியை என நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார். அது நடக்காது நம் தலைவரிடம் என்பதை புரிந்து கொண்டதால் தான் வெளியேறிவிட்டார் கண்ணப்பன்.

கோடிகள் வைத்துள்ளவனைவிட, கொள்கை, குறிக்கோள்-லட்சிய வேட்கையும், உறுதியும் கொண்டோரே தன் சேனைக்குத் தேவை என்பதில் காலங்காலமாக மிக வைராக்கியத்துடன் இருந்து வந்துள்ளவர் தான் தலைவர் கருணாநிதி என்பதை கண்ணப்பன் விஷயத்திலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

கண்ணப்பனும் வெளியேறி விட்டார். போய் சேருகிற இடத்தில் மீண்டும் அவமானப்பட்டு பரிதாபத்திற்குரியவராய் ஆவார் என்பதை அங்கிருந்து அவமானத்தை அனுபவித்து அறிந்தவன் என்பதால் கண்ணப்பனுக்கு நினைவுபடுத்துகிறேன்.

பரிதாபமாக பலமுறை கலங்கி கதியற்று இருந்த கண்ணப்பனை, கைதூக்கிவிட்ட கருணாநிதியை பழிப்பதா? போயஸ் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகிறதோ உள்கட்சி ஜனநாயகம்? தன்னிலை மறந்து தலைக்கனத்தோடு பேசவேண்டாம் கண்ணப்பன்.

இவ்வாறு கூறியுள்ளார் சேடப்பட்டி முத்தையா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X