For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னியில் பட்டினிக்கு பலியாகும் தமிழர்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: உணவு கிடைக்காமல் மேலும் பல தமிழர்கள் பட்டினிக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பட்டினிச் சாவை சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் படையெடுப்பினால் - நேரடிப் படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் போக - பட்டினியாலும், நோயினாலும் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்பட, உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டுவிட்டது.

சிறிலங்கா அரசின் போர் முனைப்பினால் வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை முதன் முதலாக தெரிய வந்தது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தனம் விசாலாட்சி (72), ஆறுமுகம் இராமையா (66), சின்னையா தர்மலிங்கம் (65) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், இரண்டு முதியவர்களும் பட்டினியால் வாடி வதங்கி உயிரை விட்டுள்ளனர். மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில், பசிக் கொடுமை தாங்காமல் விஷச் செடியை, சாப்பிடும் கீரை என நினைத்து எடுத்துச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மயக்கமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் சிறார்கள் ஆவர்.

இதுதவிர இடம் பெயர்ந்து வந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 13 தமிழர்கள் உயிரிழ்நதுள்ளனர். வயிற்றுப் போக்கை தடுக்கும் மருந்துகள் இல்லாததால் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்கறிகள், உணவுப் பொருட்கள், பால் பவுடர் உள்ளிட்ட எதுவுமே இல்லாத நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சில இடங்களில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் விலை மிக மிக அதிகமாக உள்ளது. ஒரு கிலோ மாவு 200 ரூபாய்க்கும், அரிசி ரூ. 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்கின்றன.

மிளகாய் வத்தல் விலை கிலோ ரூ. 3000 என்று விற்கப்படுகிறது. மஞ்சள் விலை கிலோ ரூ. 3000. ஒரு தேங்காயின் விலை ரூ. 150 ஆக உள்ளது. சாமானிய மக்களால் இவற்றை வாங்க முடியாத நிலை இருப்பதால் பட்டினிச் சாவுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X