For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழம்-விடுதலை சிறுத்தைகள் தொண்டர் தீக்குளித்து சாவு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்து இறந்தார். அவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவர் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளை கே.எம்.கார்டனைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் பகுதி அமைப்பாளராகவும் உள்ளார்.

இவருக்கு லட்சுமி (21) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தமிழ் மீது அதிக பற்று கொண்ட இவர் தனது குழந்தைகளுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த நாம் தமிழர்' நடைப் பயணத்தில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார்.

ஆனால் வீட்டில் இன்னும் சமையல் செய்யவில்லை என்று கூறி லட்சுமி சாப்பாடு வாங்குவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற மனைவி லட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். கணவன் உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீதர் எழும்பூர் பகுதி அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இன்று பெரம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நாம் தமிழர் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் சோகமாக காணப்பட்டார். இடையில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீதர் இலங்கை தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார் என்றார்.

ஆனால் இதை மறுத்த போலீஸார், மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பசண்டை காரணமாகத்தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் அஞ்சலி:

தீக்குளித்து பலியான ஸ்ரீதரின் உடல் அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அவரின்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது ஸ்ரீதரின் மூத்த மகன் தனது தந்தை தீக்குளித்ததை தான் நேரில் பார்த்ததாக அழுதபடி திருமாவளவனிடம் கூற சுற்றி இருந்தவர்கள் கண்கள் மட்டுமல்ல நெஞ்சமும் ஈரமானது.

திரூமாவளவன் கூறுகையில்,

ஈழத்தில் அமைதி திரும்ப போரை நிறுத்த வலியுறுத்தி நேற்று நாம் தமிழர் நடைபயணம் சென்றோம். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான ஸ்ரீதர் என்ற எழில்வளவன் கலந்து
கொண்டார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்கு வந்த அவர் ஓட்டலில் சாப்பாடு வாங்கிவரச் சொல்லி மனைவியை வெளியே அனுப்பி வைத்து விட்டு தனது வீட்டிலேயே
தீக்குளித்தார்.

ஈழத் தமிழர்களை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் காணப்பட்ட அவர் தமிழர்கள்
செத்து மடிவதை தாங்க முடியாமல் தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மகனுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்த அவர் என்னுடன் வேலூர் சிறைச் சாலையிலும் 5 நாட்கள் இருந்துள்ளார்.

நாளை அடக்கம்...

பழ.நெடுமாறன், ராமதாஸ், வைகோ தா.பாண்டியன், போன்ற தலைவர்களும் ஸ்ரீதரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இது போன்று உணர்ச்சி வசப்பட்டு யாரும் தீக்குளிக்க வேண்டாம்
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த கடலூர் தமிழ் வேந்தனை தொடர்ந்து தம்பி எழில்வளவனும் தீக்குளித்து மடிந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது உடல் நாளை காலையில் ஓட்டேரி ஈடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

குடும்ப தகராறு காரணமாக எழில்வளவன் தீக்குளித்ததாக போலீசார்
தவறான தகவலை கூறியுள்ளனர். எழில்வளவனுக்கும் அவரது மனைவிக்கும் இதுவரையில் எந்த ஒரு பிரச்சினைக்கும் கூட சண்டை வந்ததில்லை என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X