• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனது உடல் வலியையும் மீறி முத்துக்குமார் மரணம் வலித்தது: கருணாநிதி

By Sridhar L
|

சென்னை: எனது உடல் வலியையும் மீறி, இளைஞர் முத்துக்குமாரின் மரணச் செய்தி எனது உள்ளத்தை வலிக்கச் செய்தது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், தனது அனுபவத்தையும் நாட்காட்டி நினைவுகளாக முதல்வர் கருணாநிதி அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்.

அந்த அடிப்படையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

31.1.2009

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக படுத்தே இருந்த காரணத்தினால் இருமல் தொந்தரவு வேறு அதிகமாக இருந்தது. அதனால் அதற்குரிய மருத்துவரை அழைத்துக் காட்டினார்கள். இருமலுக்கான "ஸ்ரப்'' அருந்தினால் நல்லதென கூறியதன் பேரில் அதனையும் அருந்தினேன்.

நான்கைந்து நாட்களாக வலி குறையாததாலும் - அவ்வப்போது திடீர் திடீரென வலி அதிகமாகி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமையாலும் - மருத்துவர்கள் ஆய்வு செய்து - என்னுடைய முதுகுத் தண்டிலேயே வலி குறைப்புக்கான மருந்தினை ஊசியின் மூலம் போட முடிவு செய்து - அதுகுறித்து என் வீட்டாரோடும், உறவினரோடும் கலந்து கொண்டு - 4.2.2009 அன்று போடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 4-ந் தேதி அந்த ஊசியைப் போடுவதென்றால் 1-ந் தேதியிலிருந்தே சில மருந்துகளை தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

என்னுடைய உடல் வலியையும் மீறி - உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன்.

பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது - தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன்.

1-2-2009

ஜனவரி சென்று பிப்ரவரியும் வந்தது. ஆனால் வந்த வலி மட்டும் சென்றபாடில்லை. இரவு 9 மணியளவில் திடீரென உடல் சோர்வும், வியர்வையும் அதிகரித்தது. இதயத்தில் ஏதாவது பிரச்சினையோ என்று மருத்துவர்களின் யோசனையின் பேரில் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டு, டாக்டர் தணிகாசலம் அதன் முடிவுகளைப் பார்த்து விட்டு அதிலே எந்த விதமான மாறுதலோ, பயப்படுவதற்கான நிலையோ இல்லை என்று கூறினார்.

3-ந் தேதியன்று அண்ணா நினைவு நாள். அண்ணா மறைந்த 1969-ம் ஆண்டிலிருந்து ஒரு ஆண்டு கூட நான் தவறாமல் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்தவன் என்ற முறையில் - இந்த ஆண்டு எப்படியும் அங்கே சென்று வந்து விட வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னோடிகளும் உடல் நலிவு இந்த நிலையில் இருக்கும்போது நான் வர வேண்டாமென்றும், என் சார்பில் மற்றவர்கள் எல்லாம் சென்று வருவதாகவும் கூறினார்கள். இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை.

மருத்துவர்களையெல்லாம் அழைத்து எப்படியாவது நான் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று வந்தாக வேண்டுமென்று உறுதியாகக் கூறினேன். அவர்களால் என் வலியுறுத்தலை மறுக்க இயலவில்லை.

ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் - நான் பயணம் செய்வதற்கேற்ற வகையில் மாறுதல் செய்து - மருத்துவர்கள் உடன் வர - நேரில் அண்ணா நினைவிடத்திற்கு மருத்துவமனையிலிருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டுச் செல்வதென்றும் - அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, நேராக அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று நிதிநிலை குறித்த அமைச்சரவைக் கூட்டத்திலே கலந்து கொள்வதென்றும், அதன் பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று இலங்கைத் தமிழ் இனப் படுகொலை குறித்து அவசரமாகக் கூட்டப்பட்ட கழகச் செயற்குழுவிலே கலந்து கொண்டு விட்டு, மருத்துவமனைக்குத் திரும்பி தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம் இரவோடு இரவாக - ஆம்புலன்ஸ் வண்டியில் பொறியாளர்களைக் கொண்டு நான் பயணம் செய்வதற்கேற்ற வகையிலும், மருத்துவர்கள் உடன் வரத்தக்க வகையிலும் மாற்றங்களைச் செய்து - வாகனத்தைத் தயார் செய்து விட்டார்.

2-2-2009

அன்றையதினம் எந்த விதமான முன்னேற்றமோ பின்னடைவோ இல்லை. டாக்டர் தணிகாசலம் உடல் முழுவதையும் குறிப்பாக இதயத் துடிப்பை நன்கு பரிசோதனை செய்து விட்டு, எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை என்று கூறினார்.

அன்று புதுவை மாநில முதல் அமைச்சர் வைத்தியலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய மந்திரியுமான வெ.நாராயணசாமி ஆகியோர் மருத்துவமனையில் என்னைச் சந்தித்தனர்.

மருத்துவமனையிலே இருந்தபோதும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்த நிலை வேறு மனதிற்கு மிகவும் வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக மருத்துவமனையிலேயே அனைத்து தமிழ் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தேன்.

மாலை 6 மணி அளவில் மருத்துவமனையில் எனது அறைக்குப் பக்கத்து அறையிலேயே அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அந்தக் கூட்டத்தில் பேராசிரியர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதியரசர் மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ம.தி.மு.க. (செஞ்சி) சார்பில் எல்.கணேசன் எம்.பி., தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கே.செல்லமுத்து, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, விவசாயத் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார், சமூக நீதி இயக்க நிறுவனர் எஸ்றா சற்குணம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், மத்திய மாநில அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கவிஞர் கனிமொழி எம்.பி., பொன்முடி, எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் - மறுநாள் 3-ந் தேதி நடைபெறவிருந்த கழகச் செயற்குழுவில் கொண்டு வரப்பட வேண்டிய தீர்மானங்களையெல்லாம் எழுதி முடித்தேன்.

3-2-2009

இன்று அண்ணா நினைவு நாள். ஒரு வார காலமாக தொடர்ந்து மருத்துவமனையிலே படுக்கையிலேயே இருந்த காரணத்தால் - ஏற்கனவே திட்டமிட்டபடி, பயணத்திற்கேற்றவாறு - உடல் நிலையை தயார் செய்து கொண்டு - சரியாக 9 மணிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் படுத்துக் கொண்டே அண்ணா நினைவிடத்திற்குப் புறப்பட்டு விட்டேன்.

டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் கோபால் மற்றும் குழுவினரும், உதவியாளர்களும் உடன் வந்தனர். அண்ணா நினைவிடத்தில் பேராசிரியரும், கழக முன்னணியினரும் குழுமியிருந்தனர். அனைவரோடும் சேர்ந்து அண்ணாவுக்கு; சக்கர நாற்காலியிலே அமர்ந்தவாறே அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது பற்றியும், அதில் முக்கியமாக எதையெதை இணைக்க வேண்டுமென்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று கழகச் செயற்குழுவிலே கலந்துகொண்டேன்.

செயற்குழுவில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தர, அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றிட ஒத்த கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'' என்ற அமைப்பின் பெயரால் தமிழகம் எங்கும் மக்களைத் திரட்டி விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலிகள் போன்ற பிரசாரச் சாதனங்களைப் பயன்படுத்தி அறப் போராட்டங்களை நடத்தி எழுச்சிப் பணிகளைத் தொடர்வது'' என்றும்,

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும், சுயாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பிரசார விளக்கப் பொதுக் கூட்டங்கள், பேரணிகளை பிப்ரவரி 7 அன்று சென்னையிலும், 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்திற்குப் பின் அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்தேன். பின்னர் 1 மணி அளவில் அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு நேராக ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் திரும்பினேன்.

2-ந் தேதி கழகச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் தருவதாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறிக்கை விடுத்திருந்தார். அதைப்பற்றி சில செய்தியாளர்கள் மருத்துவமனையில் என்னிடம் கேட்டபோது, ஆட்சியிலிருந்து விலகி விடுவதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது என்று கூறினேன். இத்தகைய விமர்சன செய்திகள் என் முதுகு வலியை அதிகப்படுத்தியபோதிலும் - அதே நாளில் ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் மருத்துவமனைக்கே எழுதியிருந்த ஒரு கடிதம் என் உள்ளப் புண்ணைப் பெரிதும் ஆற்றுகின்ற வகையிலே அமைந்திருந்தது. என் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம், ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதியிருந்தார்.

4-ந் தேதியன்று என் முதுகுத் தண்டிலேயே வலியைக் குறைப்பதற்கான ஊசியைப் போடலாம் என்று ஏற்கனவே எடுத்த முடிவின்படி - 3-ம் தேதியன்று டாக்டர்கள் எல்லாம் என்னை அணுகி அதைப் பற்றிய சாதக பாதகங்களையெல்லாம் விவரித்தார்கள். என்னுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் அந்த ஊசியைப் போடலாமென்றும் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றார்கள். அதற்கான ஒப்புதல் கையெழுத்தை என்னிடமும், ஸ்டாலினிடமும் பெற்றார்கள்.

இந்த ஊசியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு என் இதயம் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய 3-ந் தேதியன்று "எக்கோ-கார்டியோகிராம்'' சோதனை செய்யப்பட்டது. மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்களும் என்னைச் சோதனை செய்து அவர்களும் தங்களுடைய ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.

3-ந் தேதியன்று மாலையில் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மருத்துவமனைக்கு வருகை தந்து என் உடல் நலம் விசாரித்தார்.

4-2-2009

முதுகுத் தண்டில் இன்று தான் எனக்கு ஊசி போடப்பட்டது. அந்த ஊசியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்று அங்கே தான் போடவேண்டுமென்று கூறி - படுக்க வைத்த நிலையிலேயே அறுவை சிகிச்சை அரங்கிற்கு காலை 6 மணி அளவில் அழைத்துச் சென்றார்கள். வெற்றிகரமாக என் முதுகுத் தண்டில் ஊசி போடப்பட்டது. பெரிய அளவில் வலி தெரியாமல் அந்த ஊசி போடப் பட்டது. 7 மணி அளவில் நான் மீண்டும் என் அறைக்குத் திரும்பினேன். அதன்பின்னர் அந்த ஊசியின் விளைவு என் உடல் நிலையில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமோ என்று சோதிப்பதற்காக அன்று நாள் முழுவதும் சோதனையிலேயே வைக்கப்பட்டேன்.

இதன் பின்னர் மருத்துவர்கள் சார்பில் விடப்பட்ட அறிக்கையில் - முதல் அமைச்சருக்கு எலும்பு சிகிச்சை நிபுணர், டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில், அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு - குறிப்பிட்ட உடல் பகுதியில் ஊசி போடப்பட்டு முதுகெலும்பில் வலியை ஏற்படுத்தி வரும் தசைப் பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் தணிகாசலம், டாக்டர் மகேஷ், டாக்டர் கோபால், டாக்டர் அருணா ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து முதல்-அமைச்சர் விரைவில் முழு உடல் நலம் பெற்று பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் - அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும் - அதிகாரப் பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட,

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக - உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்றினை மருத்துவமனையில் இருந்தவாறே அறிவித்தேன். அந்தக் குழுவிற்கு தமிழகச் சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராகவும், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மத்திய மந்திரி ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாகவும் இருப்பார்கள் என்றும், அவர்கள் பல்வேறு நாடுகளிலே உள்ள ஆர்வலர்களோடு தொடர்பு கொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்றும் அறிவித்தேன். அந்தக் குழுவில் நீதியரசர்கள் மோகன், பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன், ஏ.கே.ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

5-2-2009

இன்றையதினம் கடுமையான வலி. வலியைக் குறைப்பதற்கான ஊசி உடனடியாக போடப்பட்டும், வலி குறையவில்லை. நேரம் அதிகமாக அதிகமாக வலியும் அதிகமாகவே, நரம்பியல் நிபுணர் டாக்டர் வேல் முருகேந்திரன் வரவழைக்கப்பட்டார். அவர் என் உடல் நிலையைப் பரிசோதித்து - நரம்புகள் தளர்ச்சி அடையாமல் இருக்க - அதற்காக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஊசி போட வேண்டுமென்று பரிந்துரை செய்தார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவ்வாறே ஊசி போடப்பட ஒப்புக் கொள்ளப்பட்டது.

காலை ஏடுகளில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. எதையும் செய்ததில்லை என்பதைப் போல ஒரு சிலர் அறிக்கைகளை விடுத்திருந்ததைப் படித்து விட்டு - வலியைப் பொருட்படுத்தாமல் - பல்வேறு காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. என்னென்ன செய்தது, எந்தெந்த போராட்டங்களில் ஈடுபட்டது என்பதையெல்லாம் நினைவிலே கொண்டு வந்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினேன்.

இந்த நாட்குறிப்பை தொடர்ந்து நாளையும் எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X