For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

By Sridhar L
Google Oneindia Tamil News

Recession
- எஸ்.ஷங்கர்

நாடு பணவாட்ட சூழலுக்குள் தள்ளப்பட்டுவிட்ட இந்த மோசமான சூழலைச் சரிப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வெளிச்சந்தை நடவடிக்கைகளில் (Open Market Operations - OMO) இறங்கியுள்ளது.

பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள ஆயுதங்களில் ஒன்றுதான் வெளிச்சந்தை நடவடிக்கை.

பணவீக்கத்தின் எதிர் நிலையான பணவாட்டம் ஏற்படும்போது, மக்களின் வாங்கும் சக்தி வற்றிப் போய்விட்டதாக அர்த்தம். இந்தப் பணவாட்டத்தைப் போக்கவே வெளிச் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளது ரிசர்வ் வங்கி.

இதற்காக ரூ.10000 கோடிக்கு தான் வெளியிட்ட கடன் பத்திரங்களை மீட்கிறது. இப்படி மீட்பதால், நாட்டில் கூடுதலாக ரூ.10000 கோடி புதிதாக பணப் புழக்கம் ஏற்படும்.

அடுத்து நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர வேண்டும்.

அப்படியும் பணவாட்டம் போகாவிட்டால்? நோட்டு அடிக்க வேண்டும். தமாஷில்லை... இதுவும் வெளிச்சந்தை நடவடிக்கைகளில் ஒன்றே!

இந்த மூன்றிலுமே பணவாட்டம் போகாவிட்டால்... நமது அடிப்படையே கோளாறு என்று அர்த்தம்!

எல்லாம் விதிப்படி நடந்தால்...!

பொருளியலின் விதிகளுக்குட்பட்டு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் அமைந்தால், ஒவ்வொரு நெருக்கடியையுமே, உடனுக்குடன் சரிப்படுத்த முடியும்.

பொருளியல் என்பது ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசித் திரியும் அரசியலைப் போன்றதல்ல. இயற்பியலின் விதிகளைப் போல... இது நடந்தால் அதற்கு தீர்வு இதுதான் என மிகச் சரியாக திட்டமிட்டு கையாளக் கூடிய அற்புதமான ஒரு துறை பொருளியல். இதற்கு அதிகபட்சத் தேவை- ஆள்பவர், கொள்கை வகுப்பாளர்களிடம் நேர்மை!

மருத்துவர்கள் நோயைக் கண்டறிந்து மருந்து தருவது போலத்தான் இதுவும்.

ஆனால், என்ன வியாதி என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயாளிக்கு என்னவென்று மருந்து தருவது? 'ஏதாவது குத்து மதிப்பாக ஒரு மருந்து தந்து, அதில் சரியாகிவிட்டால், ஆஹா... என்ன ஒரு மருந்து...! என்னே அற்புதமான டாக்டர்!!' என்று சிலாகிப்பதைப் போலத்தான் இந்தியப் பொருளாதாரமும்.

கராகாட்டக்காரனில் கவுண்டமணி சொல்வது போல, 'முதல்ல பெட்ரோல் ஊத்தினேன், அப்புறம் டீஸல், அதுக்கப்புறம் குரூட் ஆயில், கொஞ்ச நாளா மண்ணெண்ணெய் ஊத்தினேன்... இப்போ எதுல ஓடுதுன்னு எனக்கும் தெரியல, இந்தக் காருக்கும் புரியல!'

சரியாகச் சொன்னால், இதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... அமெரிக்கப் பொருளாதாரம் மிகச் சரியான வரையறைகளுக்கு உட்பட்ட ஒன்று. அதற்கு நேர் எதிர் தன்மை கொண்ட க்யூபாவின் பொருளாதாரமும் சரியான நெறிமுறைகளுக்கு உட்பட்டதே.

இந்த இரண்டு நாடுகளுமே, தங்கள் பொருளாதாரத்தை Recession எனப்படும் மந்தம் எப்போது தாக்கும், எத்தனை ஆண்டுகள் வரை இந்த மந்தம் நீடிக்கும், எப்போது அதிலிருந்து நாடு வெளியே வந்து Boom எனப்படும் உச்சநிலையை அடையும் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடும் அளவுக்கு தெளிவாக உள்ளன.

உதாரணத்துக்கு: அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி நிலை 2007-ன் பிற்பகுதியில் ஆரம்பித்தது. 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இது பேயாட்டம் போடும், 2010-ல் அடங்கி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிவிடும் என்பதை மிகச் சரியாக கணித்துச் சொல்லிவிட்டார் அந்நாட்டு Federal Reserve தலைவர் பென் பெர்க்மன். இந்தக் கணிப்பை அவர் இன்று நேற்று சொல்லவில்லை, 2007 டிசம்பரிலேயே வெளியிட்டுள்ளார்.

இதோ... பொருளாதார வீழ்ச்சி நிலை இப்போது உச்சத்தில் உள்ளது அமெரிக்காவில். இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தெரியவும் ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்தியாவில் அப்படியல்ல...

இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை என்னவென்று மக்களுக்கும் தெரியாது, ஆட்சியாளர்களுக்கும் புரியாது. ஜோசியக்காரர்களுக்கு நிகரான அறிஞர்கள்தான் இங்கே நிதித்துறையை ஆள்கிறார்கள்.

'போன வருஷம் பணவீக்கம் அதிகமா இருந்ததுன்னா... இந்த ஆண்டு குறைவாகத்தான் இருக்கும். அடுத்த வருஷம் திரும்ப ஏறும் (கருத்து உபயம் சி. ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர்!!)' என்று கூறுபவர்களைத்தான் நாம் பொருளியல் அறிஞர்களாகப் பெற்றுள்ளோம்.

நிதியமைச்சரோ பொருளியல் கோட்பாடுகளை நன்கு உணர்ந்திருந்தும், நம் நாட்டுக்கு என்ன தேவை என்று யோசிக்காமல் அமெரிக்க மனோபாவத்தில் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்.

உலக பொருளாதார வரலாற்றிலேயே பணவீக்கம் என்ற சொல்லே அர்த்தமற்றுப் போனது அநேகமாக இந்தியாவில்தான்.

பணவீக்கத்தைக் கணிக்க மொத்த விலைக் குறியீ்ட்டைப் பயன்படுத்துகிறோமா... அல்லது நுகர்வோர் குறியீட்டெண்ணைப் பயன்படுத்துகிறோமா... என்பதெல்லாம் சாமானியனுக்கு தேவையில்லாத ஒன்று. அவனது எதிர்பார்ப்பென்ன?

"பணவீக்கம் உச்சத்திலிருந்தபோது விலை ஏறியது, வட்டிகள் ஏறின, குண்டூசி விலை முதல் ஏரோப்ளேன் கட்டணம் வரை எல்லாவற்றின் உயர்வுக்குமே பணவீக்கத்தைக் காரணமாக சொன்னார்கள்.

இன்று-
தேர்தல் திருவிழா தந்த போதையில், 'பணவீக்கமே இல்லை. எல்லாம் புஸ் ஆகிவிட்டது' என்று அறிவிக்கிறீர்கள் அல்லவா... ஆனால் விலைகள் குறையவில்லையே! அன்று கிலோ ரூ.20-க்கு வெங்காயம் வாங்கினேன்... இப்போது ரூ.30 ஆகிவிட்டது. அப்புறம் என்னய்யா பணவீக்கம், வெங்காயம்!" - என்ற ஒரு சராசரி இந்தியனின் கோபத்தில் எந்த தவறும் இல்லையல்லவா!

எனில் தவறு எங்கே... நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களிடம்...!

நாட்டை பாதிக்கும் எதையும் விட்டு வைக்கவே கூடாது... மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கோட்பாடுகளாக இருந்தாலும் சரி... அதை வகுப்பவர்களாக இருந்தாலும் சரி!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X