For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைக்கு பரவிய டெல்லியில் குரல்..ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை பிரச்சினையில் இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறி தமிழர்களை முதல்வர் கருணாநிதி கைகழுவி விட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை இனப் படுகொலை போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாப்பதில் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரையில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை.

ஈழத் தமிழர்களை பாதுகாக்கும் கடமையை தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்றும், அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தை கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற ரீதியில் தமிழக அரசின் முதல்வர் கருத்துக் கூறியிருப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கை தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், அதன் முதல்வரும் கைகழுவி விட்டனர் என்பதையே இந்தக் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை டெல்லியில்தான் இருந்தது. இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று ஐயப்படும்போது. இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்பது ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறை.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால், அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டு பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. இராக்கில் அமெரிக்கா தலையிட்டதும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கூட்டுப் படையினர் தலையீட்டு நடவடிக்கை மேற்கொண்டதும் இதே கோட்பாட்டின்படிதான். வங்க தேசப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டதும், ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான்.

முன்பு இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால் ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி உணவுப் பொருட்களை வினியோகம் செய்திருக்கிறது. ஈழப் போராளி குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான்.

அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை. ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது.

அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும். அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும். போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்வதை விட்டு விட்டு இந்திரா காலத்து உணர்வோடும், உறுதியோடும், துணிச்சலோடும் இப்போது இந்திய அரசு செயல்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசும் முதல்வரும் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X