For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே .. சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இலங்கை அரசே! போரை நிறுத்து! என்று வலியுறுத்தி முழக்கமிட்டு லட்சக்கணக்கிலே பேரணியாக வந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமையேற்கின்ற வாய்ப்பு பெற்றதை மகிழ்ச்சியாக கருதவில்லை-இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழம்பித் தவிக்கிறேன்..

இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள். எவ்வழியை நான் கண்டுபிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பி தவிக்கிறேன்.

ஏனென்றால், ஏறத்தாழ் 50 அல்லது 60 ஆண்டு காலமாக, இந்த பிரச்சினை, அறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோருடைய காலத்தில் இருந்து ஈடுபடுத்தி கொண்டவன் என்ற முறையில் ஒவ்வொரு காலத்திலும் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டிக்கும் நிலையிலும்-அங்கே விழுகின்ற தமிழர்களுடைய பிணங்களைப் பார்த்து, கண்ணீர் உகுக்கின்ற நிலையிலும், இலங்கையோடு எனக்கு தொடர்பு உண்டு.

இலங்கைக்கு நான் செல்வதற்கு அங்கேயிருந்த அரசுகள் தடை விதித்தபோதும், இலங்கையில் தமிழர்களுக்கு காவலர்களாக, துÖதுவர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் நான் தோழனாக இருக்கிறேன். அந்த வகையில் இலங்கை பிரச்சினை எனக்கு புதிய பிரச்சினை அல்ல.

ஏன் ஆட்சியை துறக்கவி்ல்லை..

நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சினைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சில பேர் ஏன் இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம், எனக்காக துறக்காமல் இல்லை, கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமல் இருக்கிறேன்.

நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால்-குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமேயானால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு, இறையாண்மைக்கு விரோதமாக, திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். எனவே இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இது ஒரு நிலை. இன்னொரு நிலை-இன்றைக்கு செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டிருக்கிறார்களே, நச்சுப்புகை குண்டுகளை வெடித்து நம்முடைய இனத்தை அழிக்கிறார்களே, இன்னும் இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று புலம்புவது எனக்கு புரிகிறது. அந்த புலம்பலின் தாத்பரியம் என்னைப்போல் எல்லோருக்கும் இருப்பதையும் நான் உணருகிறேன்.

நீங்களும் அடிமை - நாங்களும் அடிமை ..

தமிழ் ஈழத்தின் தந்தை என்று புகழப்படுகின்ற மறைந்த செல்வநாயகம், 1974ம் ஆண்டு வாக்கில் தமிழகத்துக்கு வந்தார். அவரை நான் சந்தித்து எங்களால் இயன்ற உதவியை தமிழர்களுக்கு, தமிழ் ஈழத்துக்கு செய்வோம் என்று குறிப்பிட்டேன். பெரியாரிடம் சென்று, அதே விவரங்களை எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவிட வேண்டுமென்று சொன்னபோது பெரியார்-நீங்களும் அடிமைகளாக இருக்கிறீர்கள், நாங்களும் அடிமைகளாக இருக்கிறோம், ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு என்ன உதவ முடியும் என்று சொன்னார்.

அது இன்றைக்கும் உண்மையாக இருக்கின்றது. நான் அந்த நிலையில்தான் இருக்கிறேன். நான் மாத்திரமல்ல. நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.

இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே போர் நிறுத்தப்பட வேண்டுமென்று உரக்க ஒலிக்கின்றன. நம்முடைய இந்திய பேரரசும் நம்முடைய குரலை மதித்து, கோரிக்கையை மதித்து போரை நிறுத்த வேண்டுமென்று கேட்கிறது. அந்த குரல் இன்றைக்கு சோனியா காந்தியின் குரலாக ஒலிக்கிறது.

இந்திரா போல செயல்பட வேண்டும் சோனியா..

நாம் விரும்புவது, திருமாவளவன் போன்றவர்கள் விரும்புவது, அது திருமதி இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாமியாரின் குரலை மருமகள் பின்பற்ற வேண்டுமானால் மற்ற நாடுகளின் நிலைமைகளை, மாமியார் காலத்திலே இருந்த உலக நிலவரம் இன்று மருமகள் காலத்திலே இருக்கின்ற உலக நிலவரத்தையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் எண்ணிப் பார்க்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் - விரைவில் எண்ணிப் பார்த்து முடிவு செய்து, எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து உங்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால்-ஒரு வேளை ஏற்படாவிட்டால், ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.

பிரபாகரனுக்கு இங்கே தண்டனை தர வேண்டும்..

இதைத்தான் ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால், தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால்- பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால், ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும்.

நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து- பல நாடுகளை கவர்ந்து பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி போரஸ்' என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது- பெருந்தன்மையோடு கேட்டான், உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று. அந்த நிலையிலும் போரஸ் மன்னன், என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்'' என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு, அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக, அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக, தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.

பிரபாகரனை வீரனாக நடத்த வேண்டும்..

போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்-நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல, கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும், இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை, தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான், அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.

சரித்திரத்தின் மூலையில் தள்ளப்படுவார் ராஜபக்சே..

சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக, தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ- தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X