For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரும்பு மனிதர்' அத்வானி உருகிவிட்டது ஏன்?-பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

Manmohan Singh
மும்பை: கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தின்போது தீவிரவாதிகளை பாஜக அரசு விடுதலை செய்து காபூலுக்கு அழைத்துச் சென்றபோது இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்ட அத்வானி அப்போது என்ன செய்து கொண்டிருந்தார். அப்போது இந்த 'இரும்பு மனிதர்' உருகிப் போனது ஏன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர்களான அத்வானியும் நரேந்திர மோடியும் மிக பலவீனமான பிரதமர் என்று தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.

இதற்கு இதுவரை அமைதியாக பதில் தந்து வந்த மன்மோகன் சிங் மும்பையில் நடந்த கூட்டத்தில் கடுமையாக பதிலடி தந்தார்.

அவர் கூறுகையில்,

தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்குவதாக வாக்காளர்களுக்கு உறுதி அளித்தது பாஜக. ஆட்சிக்கும் வந்தது. அந்த அரசின் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று பட்டம் எல்லாம் கொடுத்து அழைத்தார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஆனால், அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் கந்தகார் விமான கடத்தல் நடந்தது. தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்கு பாஜக அரசு பணிந்தது. சிறையில் இருந்த தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் நகருக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தான் விமானத்தில் அழைத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு வந்தார். என்னை பலவீனமான பிரதமர் என்று கூறும் அத்வானி அப்போது, என்ன செய்து கொண்டிருந்தார்?.

அப்போது விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்து இன்றுவரை இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறான்.

ஆனால், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் அழைத்துச் செல்லப்பட்டது தனக்குத் தெரியாது என உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி கூறுகிறார். இதை யாராவது நம்புவார்களா?.

அதை உண்மை என்றே வைத்தக் கொள்வோம். அப்படியானால் அத்வானியை வாஜ்பாய் நம்பவில்லையா?. அப்படியென்றால் ஏன் வாஜ்ய்பாய் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து இருந்தார்?

அதுபோல 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தான் கண்ணீர் விட்டதாக கூறுகிறார் அத்வானி. எனக்கு அவரைப் போல மூலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்க தெரியாது.

அதேபோல, சிறுபான்மையினர் மீது நடந்த தாக்குதலுக்கு கட்சியை சேர்ந்த முதல்வர்ககளில் ஒருவர் கண்டனம் தெரிவித்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்ததாகக் கூறுகிறார் அத்வானி. அவரைப் போல இருக்கவும் எனக்குத் தெரியாது.

இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் நாடாளுன்றம் மீது தாக்குதல் நடந்தது. அதை இவரால் தடுக்க முடிந்ததா?

இவர்களுக்கு தீவிரவாதிகளை விடுவித்த விமானத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு வரத் தான் தெரியும். ஆனால், மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நாங்கள் திறமையாக செயல்பட்டு கமாண்டோக்களை அனுப்பி அவர்களைக் கொன்றோம். ஒருவனை உயிருடன் பிடித்தோம்.

அது மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தி தங்கள் மண்ணில் தான் மும்பை சதித் திட்டம் உருவானதாக ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறோம். இதற்கு எங்கள் அரசின் திறமை தான் காரணம். இது பலவீனமா?

ஜஸ்வந்த் சிங்கை கந்தகாருக்கு அனுப்பும்போது, ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவராக இருந்த என்னுடன் அரசு ஆலோசனை நடத்தியதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அது தவறு. என்னுடன் அவர்கள் பேசவே இல்லை. பேசியிருந்தாலும் தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன்.

பாகிஸ்தான் பயணத்தின் போது ஜின்னா பற்றி உயர்வாக பேசிவிட்டு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்தவர், அத்வானி. இதனால் தலைவர் பதவியையும் இழந்தார். தனது கட்சியையே கட்டுப்படுத்த முடியாத இவரால் எப்படி பிரதமராக இருந்து நாட்டை காக்க முடியும்?.

உரத்த குரலில் கத்துவதோ அல்லது அடுத்தவர் மனம் புண்படும்படி தாக்குதவதோ மட்டும் வலிமை அல்ல. அப்படிச் செய்யாதவன் பலவீனமானவனும் அல்ல.

அத்வானியுடன் டி.வியில் நேரடி விவாதத்துக்கு தயாரா என்று பாஜக சார்பில் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மாற்றுப் பிரதமராக அவரை நான் கருதினால் தானே அப்படி ஒரு விவாதத்துக்கு நான் வர முடியும். நான் அவரை அப்படி உயர்ந்த நிலையில் கருதவே இல்லையே.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக என்னால் கருத முடியவில்லை. அங்கு தானே 1,200 அப்பாவிகள் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்து வகையிலும் ஒரு மாநிலம் வளர்ச்சியடைந்தால் இது போன்ற சம்பவம் நடக்காது. குஜராத் கலவரமும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரமும் நாட்டின் கரும் புள்ளிகள்.

வரும் தேர்தலில் எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்போம். தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைக் காக்க முடியும்.

ராகுல் காந்தி ஒரு நல்ல இளைஞன். முற்போக்கான சிந்தனை கொண்ட வாலிபர். ஒரு நல்ல பிரதமருக்கு உரிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன.

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை ஜெர்மன் போன்ற நாடுகள் திரும்ப கொண்டு வந்தது குறித்து தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அதேநேரத்தில் பாஜக கூறுவது போல, ரூ.72 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியாவின் கறுப்பு பணம் இல்லை. அது பாஜகவின் வளமான கற்பனை என்றார் மன்மோகன் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X