For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இலங்கை.. 2 நாளில் உண்மை நிலவரம் தெரியும்'

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: இலங்கையில் உள்ள உண்மையான நிலவரம் என்ன என்பது இரண்டு நாளில் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் செளகத் ஷெரீப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர் பேசுகையில்,

2 நாட்களுக்கு முன்பு இலங்கை போர் குறித்து கூறும்போது, இன்று ஓர் இரவு பொறுத்து இருந்து பார்ப்போம்' என்று முதல்வர் கருணாநிதி கூறினார். அதற்கு என்ன அர்த்தம் என்று அப்போது தெரியவில்லை. இந் நிலையில் காலையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதம் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகமாகும்.

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகிவிட்டது என்று கூறி, அவரும், மற்றவர்களும் உண்ணாவிரதத்தை கைவிட்டு சென்று விட்டனர். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இரண்டொரு நாளில் தெரியவரும்.

உங்களுக்காகத்தான் நான் தேமுதிகவை தொடங்கினேன். இன்று வரை மாறாமல் இருக்கிறேன். உங்களை நம்பி இருக்கிறேன்.

ஜெயலலிதா முன்பு ஆடு, கோழிகளை கோவில்களில் பொதுமக்கள் வெட்டக்கூடாது என்றார். ஆனால், அவர் மட்டும் கேரளாவில் உள்ள கோவிலுக்கு யானை வழங்கலாமா?.

நான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு எழுச்சியை பார்க்கிறேன். தேமுதிக 40 தொகுதிகளில் வெற்றி பெறும். அவர்களுக்கு வருவது கும்பல். தேமுதிகவுக்கு வருவது கூட்டம். கும்பல் என்பது கூடி கலைவது. கூட்டம் என்பது கூடி நிலைப்பது.

எனக்கு ஒரு தடவை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். பின்னர் தமிழ்நாட்டை எப்படி வழி நடத்தி காட்டுகிறேன் என்பதை பாருங்கள் என்றார்.

அண்ணா மன்னிக்க மாட்டார்-வைகோ:

இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் எச்சரித்ததாலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டித்ததாலும், கிழக்கு தைமூரிலும் கொசோவாவிலும் தலையிட்டதைப் போல, இலங்கையிலும் சர்வதேச நாடுகள் தலையிட்டு விடுமோ என்ற அச்சத்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு மோசடியான அறிவிப்பை செய்துள்ளார்.

அந்த அறிவிப்பு போர் நிறுத்தமல்ல. இதுவரை நடந்த தமிழர் இன அழிப்புப் போரை, வேறு வகையில் நடத்தத் திட்டமிட்டுள்ள அறிவிப்பு. இந்த அறிவிப்புக்குப் பிறகு, நேற்று பகல் 12.50 மணிக்கும், 1.10 மணிக்கும் இலங்கை விமானங்கள் முல்லை வாய்க்கால் பகுதியில் குண்டு வீச்சு நடத்தியதில், தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கர ஆயுதங்கள் எவையென்று இலங்கை அரசு விளக்கம் கொடுக்கவில்லை. எனவே, பீரங்கிகளையும், கிளஸ்டர்களையும், சிறிய ஏவுகணைகளையும் பயன்படுத்தி குண்டுவீசி தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.

சர்வதேச சமுதாயத்தையும், தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்காக ராஜபக்சே இந்த மோசடியான அறிவிப்பைச் செய்துள்ளார். நாசகர ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி போரை நடத்தப் போவதாகவும் தமிழ் மக்கள் முல்லைத் தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பில் போர் நிறுத்தம் என்ற வார்த்தையே இல்லை.

இந் நிலையில் தமிழர் பகுதிகளில் கொடூரமான துயரமும் கொலைகளும் தமிழர்களுக்கு விளைந்தால் அதற்கு உண்மையான பொறுப்பாளி என்ற துரோகக் குற்றச்சாட்டும், பழியும் மறுக்க முடியாத உண்மையாகிவிடும். அதனால் தான் முதல்வர் கருணாநிதி திடீரென்று அண்ணா சதுக்கத்தில் 5 மணி நேர உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்தினார்.

கருணாநிதியின் துரோகத்தை கல்லறைக்குள் இருக்கும் அண்ணா, ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X