For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திரா-ஒரிஸ்ஸாவில் காங் வெல்லும்; குஜராத், கர்நாடகத்தில் பாஜக-பிகாரில் லாலு தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத், கர்நாடகம் பாஜகவும், பிகாரில் அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திரா, ஒரிஸ்ஸாவில் காங்கிரசும் பெரும் வெற்றி பெறும் என்று என்டிடிவி எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 77,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த எக்ஸிட் போல் கணிப்பை நேற்று இரவு முதல் என்டிடிவி ஒளிபரப்பி வருகிறது.

முதல் கட்டமாக ஆந்திரா, தமிழ்நாடு, பிகார், குஜராத், ஒரிஸ்ஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் முடிவை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

ஆந்திரா..சிரஞ்சீவியால் தோற்கும் நாயுடு:

ஆந்திராவில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் 29 இடங்களிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 10 இடங்களும், அதனுடன் இருந்துவிட்டு தேர்தலுக்கு மறுநாள் பாஜக கூட்டணிக்கு ஓடிப் போன தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதிக்கு 2 இடங்களும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும்.

தமிழகத்தில் ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்குகளை பிரித்து அதிமுக கூட்டணியின் தோல்விக்கு விஜய்காந்த்தின் தேமுதிக காரணமாவது போல, ஆந்திராவிலும் ஆளும் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளில் பெருமளவை சிரஞ்சீவி பெறுகிறார்.

இதனால் தான் தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்ட்ரீய சமிதிக்கு தோல்வி ஏற்படவுள்ளது.

ஆந்திராவி்ல மக்களவை, சட்டசபை இரண்டுக்கும் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சிரஞ்சீவி 18 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இது தமிழகத்தில் விஜய்காந்த் பெற்றுள்ள 10 சதவீதத்தை விட அதிகமாகும்.

இந்த 18 சதவீத வாக்குகளில் 9 சதவீதத்தை காங்கிரசிடம் இருந்தும் 7 சதவீதத்தை தெலுங்கு தேசத்திடம் இருந்தும், மற்ற வாக்குகளை பிற கட்சிகளிடமிருந்தும் இழுத்துவிட்டார் சிரஞ்சீவி.

இதனால் கடந்த முறையைப் போலவே காங்கிரஸ் இம்முறையும் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெல்லும். தெலுங்கு தேசத்துக்கு 3 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். தெலுங்கானாவை வைத்து அரசியல் செய்து வரும் ராஷ்ட்ரீய சமி்திக்கு 3 இடங்கள் குறையும்.

தொங்கு சட்டசபை...

அதே போல ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிகிறது.

காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு. 14 சதவீத ஓட்டுக்களை பிரிக்கும் சிரஞ்சீவியே தொங்கு சட்டசபை ஏற்படவும் காரணமாக உள்ளார்.

எனவே சிரஞ்சீவி யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அவரே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம்.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு தொடரும் வெற்றி..

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜகவே 17 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வெல்லும்.

கடந்த முறை பாஜக 18 இடங்களில் வென்றது. அதில் ஒன்று இம்முறை குறையும். கடந்த முறை 8 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு இம்முறை 9 இடங்கள் கிடைக்கும்.

பிகாரில் லாலுவுக்கு பெரும் தோல்வி...

பிகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 33 இடங்களில் வெல்லும்.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கூட்டணிக்கு (நான்கவது அணி) இம்முறை வெறும் 5 இடங்களில் தான் வெல்லும். இந்தக் கூட்டணி காங்கிரசுடன் இணைந்து கடந்த முறை 21 இடங்களில் வென்றது.

ஆனால், இம்முறை காங்கிரசுக்கு வெறும் 2 சீட் தான் தருவோம் என்று கேவலப்படுத்தினார் லாலு. இதனால் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதன் காரணமாகவே லாலு கூட்டணிக்கு இந்த மாபெரும் தோல்வி ஏற்படவுள்ளது. கடந்த தேர்தலில் 3 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு இம்முறை தனித்து நின்றதால் 1 இடம் மட்டுமே கிடைக்கும்.

குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றி...

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 18 இடங்களில் வெல்லும். கடந்த முறை 14 இடங்களில் வெனற அந்தக் கட்சிக்கு இம்முறை கூடுதலாக 4 இடங்கள் கிடைக்கும்.

கடந்த தேர்தலில் 8 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு 4 இடங்களே கிடைக்கும்.

முற்பட்ட படேல் சமூகத்தினரிடையே மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தலித்கள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் அவரது செல்வாக்கு சரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த மாநிலத்தில் யார் சிறந்த பிரதமர் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு மோடிக்கு 29 சதவீதத்தினரும் மன்மோகன் சிங்குக்கு 29 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், பாஜக மூத்த தலைவரும் குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிடுபவருமான அத்வானிக்கு 26 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்தனர்.

ஒரிஸ்ஸாவில் காங்கிரசுக்கு அதிர்ஷ்ட வெற்றி..

ஒரிஸ்ஸாவில் கூட்டணியிலிருந்து பாஜகவை முதல்வர் பிஜூ பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் விரட்டிவிட்டதையடுத்து ஏற்பட்ட ஓட்டு பிளவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடிக்கவுள்ளது.

இங்கு மொத்தமுள்ள 21 இடங்களில் காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைக்கும். கடந்த தேர்தலில் அங்கு வெறும் 3 இடங்களில் தான் காங்கிரஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

பிஜூ ஜனதா தளத்துக்கு 9 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட 2 இடங்கள் குறைவு.

அதே நேரத்தில் இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும். கடந்த முறை 7 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை வெறும் 2 இடங்களே கிடைக்கும்.

ஆக மொத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்த 6 மாநிலங்களில் மொத்தமுள்ள 196 இடங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு 77 இடங்கள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 72 இடங்கள் கிடைக்கும்.

மூன்றாவது அணிக்கு 39 இடங்கள் கிடைக்கும். நான்காவது அணிக்கு வெறும் 5 இடங்கள் தான் கிடைக்கும் என்று அந்த எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்கள் குறித்த எக்ஸிட் போல் கணிப்பை இன்று, நாளையும் இரவில் என்டிடிவி வெளியிடவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X