For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் இன்னும் போர்க்களத்தில்தான் இருக்கிறார்-புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் போர்க்களத்தில்தான் இருக்கிறார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர்தான் போரை நிறுத்தும் முடிவை நாங்கள் எடுத்தோம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரபாகரன் பத்திரமாகவும், உயிருடனும் இருப்பது உறுதியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், அவரது உடல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனால் பெரும் குழப்பமும், உலகத் தமிழர்கள் மத்தியில் பதட்டமும் ஏற்பட்டது. இது உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த எந்த வாய்ப்பும் இல்லை. மேலும், போர் கசப்பான முடிவுக்கு வந்து விட்டது என்று கூறி செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சிக்கு பத்மநாதன் ஒரு பேட்டி அளித்தார். அதில், போர்க்களத்தில்தான் பிரபாகரன் இருக்கிறார் என்று தெளிவாக கூறியுள்ளார். இதன் மூலம் பிரபாகரன் குறித்த செய்திகள் தவறு என்பது உறுதியாகியுள்ளது.


நேற்று மாலை ஒளிபரப்பான பத்மநாதனின் பேட்டி விவரம்..
விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன?

எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

2 ஆயிரத்துக்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாங்கள் போரை நிறுத்திக்கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணி நேரத்திலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

அவர்கள் பொதுமக்களா?

ஆம்.

இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கின்றீர்கள்?

போரை நிறுத்துவது தொடர்பாகவும், உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாங்கள் நேற்று முதல் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா?

ஆம். இந்த போரை நிறுத்திக் கொள்வதற்கே விரும்புகின்றோம்.

விடுதலைப் புலிகள் கெரில்லா போர் போன்ற முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கடந்த 38 வருட காலமாக நாங்கள் போராட்டத்தை நடத்திவருகின்றோம். தினசரி மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்... நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

பிரபாகரனுடன் ஆலோசித்த பின்னரே முடிவு:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எவ்வாறான உத்தரவுகள் வந்திருக்கின்றன?

பிரபாகரன்தான் உண்மையில் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். நான்கு மணி நேரமாக நான் அவருடன் பேசினேன். அவர்தான் இந்தச் செய்தியை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தந்திருக்கிறார். அதற்கான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். இதுவரையில் இதற்கான பதிலை யாரும் தரவும் இல்லை. யாரும் போரை நிறுத்தவும் இல்லை.

பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியிலா இருக்கின்றார்?

ஆம்.

சரணடைய மாட்டார் பிரபாகரன்...

நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

சரணடைவதல்ல. நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவோம். ஒப்படைக்க மாட்டோம்.

ஏன் ஒப்படைக்க மாட்டீர்கள்?

உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாஙகள் விடுதலைப் போராட்டத்துக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் ஒப்படைக்க வேண்டும்?

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் இவ்வளவு மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது? அவர்களை வெளியே செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?

நாங்கள் பொதுமக்களை ஒருபோதும் எங்களுடன் வைத்திருக்கவில்லை. அந்தப் பொதுமக்கள் எங்களுடைய உறவினர்கள் அல்லது குடும்பத்தவர்கள். அல்லது இலங்கை ராணுவம் தங்களுக்குப் பாதுகாப்பை ஒருபோதும் தராது என நம்புபவர்களாக அவர்கள் இருக்கலாம். முகாம்களுக்குச் செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை.

அவர்கள் இலங்கை படைகளிடம் செல்வதற்கு விரும்பவில்லை. அரசாங்கம் அவர்களுக்கான மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் நிறுத்தியது. அவை இல்லாமல் மக்கள் மரணமடைந்தார்கள். நாங்கள் மனிதர்களை ஒருபோதும் கேடயங்களாகப் பயன்படுத்துவதில்லை. அது தவறான தகவல். தவறான பிரச்சாரம்.

பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மையில்லையா?

உண்மையில் நாங்கள் அவர்களைச் சுடவில்லை. துப்பாக்கிச் சண்டையின் இடையில் அவர்கள் அகப்பட்டிருக்கலாம். எங்களது மக்களை எதற்காக நாங்கள் கொல்ல வேண்டும்?

வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு மருத்துவர்கள் காணாமல் போய்விட்டனரா?

கடந்த இரவு ஒரு மருந்துவர் காயமடைந்தார். நாங்கள் அவர்களை ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தோம். இப்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி மருத்துவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். மற்றவர் ராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணிநேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதைய பொறுத்து இது அமையும். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம் என்றார் பத்மநாதன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X