For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவுக்கு நினைவு தினம்-சோனியா ஸ்ரீபெரும்புதூர் வரவில்லை

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi
டெல்லி: ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். முன்பு கூறியபடி அவர் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவில்லை.

ராஜீவ் காந்தியின் 18வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ் - சோனியா தம்பதியினரின் புதல்வர்களான பிரியங்கா, ராகுல் காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் எம்.பிக்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

18வது நினைவு தினத்தை நினைவு கூரும் வகையில், 19 சிறார்கள் பாடல்கள் பாடினர்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் சோனியா அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்க்பட்டது. ஆனால் வர வேண்டாம் என உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூர் வருகையை ரத்து செய்ததாக தெரிகிறது.

நினைவிடத்தில் சாமி அஞ்சலி..

இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி இன்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சந்திரலேகா மற்றும் ஜனதாக் கட்சியினரும் வந்திருந்தனர்.

கர்நாடகத்திலிருந்து வந்த ஜோதி..

கர்நாடகத்திலிருந்து சேவாதள தொண்டர்கள் அணையா ஜோதியை தொடர் ஓட்டமாக கொண்டு வந்திருந்தனர். அதை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பெற்று ஏற்றி வைத்தார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸாரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி...

ராஜீ்வ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் இன்று தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு அமைச்சர் அன்பழகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் அதை திருப்பிக் கூறினர்.

இதேபோல சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் மா.சுப்ரமணியம் தலைமையில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தமிழகம் முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கும், படங்களுக்கும் காங்கிரஸார் மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர்.

சிலைகளுக்கு பாதுகாப்பு...

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கையால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X