For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமப்புற மாணவர்கள் மீண்டும் அசத்தல்-சென்னைக்கு சறுக்கல்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் சென்னை மீண்டும் பின் தங்கியுள்ளது. வழக்கம் போல கிராமப்புற மாணவர்கள் அட்டகாசமாக தேறியுள்ளனர்.

முன்பெல்லாம் ஸ்டேட் பர்ஸ்ட் என்றாலே அது சென்னை மாநகர பள்ளி மாணவ, மாணவியர்தான். அவர்களைத் தாண்டி பிற மாவட்ட மாணவ, மாணவியர் முதலிடத்தைப் பிடிப்பது என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. மிக மிக அரிதாகத்தான் முதலிடத்துக்கு போக முடிந்தது பிற மாவட்ட மாணவர்களால்.

ஆனால் இன்று சென்னை மாநகர மாணவ, மாணவியர் வெளியூர்களுக்குப் போய் படிக்கலாமோ என்று எண்ணும் அளவுக்கு பிற மாவட்ட பள்ளிகள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவில் நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர் மாணவ, மாணவியர்தான் முதலிடத்தைப் பிடித்தனர்.

அதேபோல இன்று வெளியான பத்தாவது வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் கூட வெளியூர் மாணவ, மாணவியரே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மாணவர் ஜோஸ் ரிஜன் முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது ரிஜானின் சாதனையாகும்.

பாளையங்கோட்டை மாணவி ஹெப்சிபா பியூலா, மதுரை மாணவர் ஜேம்ஸ் மார்ட்டின், கோபி சுஷ்மா, நாமக்கல் அபிநயா, பட்டுக்கோட்டை துளசிராஜ் ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று 2-வது இடங்களை பிடித்துள்ளனர்.

3-வது இடத்தை அருப்புக்கோட்டை, கரூர், வேடசந்தூர் மாணவர்கள் கைப்பற்றினார்கள்.

முதல் மூன்று இடத்தில் ஒரு இடத்தில் கூட சென்னையைக் காணவில்லை என்பது தலைநகர பள்ளிகள் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இதே போல் மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளிலும் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களே முதல் 3 இடங்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

இந்த நிலை இந்த ஆண்டு என்று இல்லை. கடந்த 2 வருடங்களாகவே இதே கதைதான். சென்னையின் ஆதிக்கம் தகர்ந்து போய் விட்டதையே இது காட்டுவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம், வெளி மாவட்ட பள்ளிகள், ரேங்க்கை மனதில் வைத்து மிகக் கடுமையாக உழைக்கிறார்கள், தங்களது மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்கிறார்கள் என்பதே.

சென்னையில் படித்தால்தான் கல்வித்தரம் நன்றாக இருக்கும் என்ற செயற்கை எண்ணத்தையும் கூட பிற மாவட்ட மாணவ, மாணவியர்கள் தகர்த்து வருகின்றனர்.

நன்றாகப் படித்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதையும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

சென்னைப் பள்ளிகளில் இன்றுள்ள நிலை என்ன. மாணவ, மாணவியர்கள் சேர்க்கையின்போதே ஏகப்பட்ட கட்டணத்தை வசூலித்து விடுகிறார்கள். அட்மிஷனுக்காக பெற்றோர்கள் படும் அவதி சொல்லி மாள முடியாது.

தாறுமாறாக கட்டணத்தை மட்டும் வசூலிக்கும் பள்ளிகளில் பெரும்பாலானவை பணத்தைக் கறப்பதிலும், தங்களது பள்ளியின் நற்பெயரைக் காப்பதிலும்தான் கவனமாக இருக்கின்றவே தவிர தரமான, சிறப்பான கல்வியை மாணவ, மாணவியருக்குப் போதிப்பதில் பின் தங்கி விடுகின்றன.

அதுதவிர சென்னை மாநகர மாணவ, மாணவியருக்கு படிப்பின் மீதான கவனமும் குறைந்து கொண்டு வருகிறது. கல்வியைத் தவிர்த்த பிற விஷயங்களில் அவர்களது கவனம் சிதறிப் போக நிறைய வாய்ப்புகள் உருவாகி விட்டன.

அதற்கேற்றார்போல பெற்றோர்களும் பிள்ளைகளை அதிகம் கண்டிக்காமல், அப்படியே கண்டித்தால் அவர்கள் ஏதாவது செய்து கொண்டு விடுவார்களோ என்ற பயத்தால், கண்டு கொள்ளாமல் இருக்க நேரிடுகிறது.

இதை விட கொடுமை என்னவென்றால், பல பள்ளிகளில் பெற்றோர்கள் படித்துள்ளனரா, ஆங்கிலம் பேசத் தெரியுமா, அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை என்ன, மாத வருவாய் என்ன என்று ஏதோ கல்யாணத்திற்கு சம்பந்தம் பேசுவது போல பேசுகிறார்கள். தாங்கள் சேர்க்கப் போகும் மாணவரை, அல்லது மாணவியரை இப்படிப் படிக்க வைக்கப் போகிறோம், இந்த நிலைக்குக் கொணடு வருவோம் என்று ஒரு பள்ளிக்கூடம் கூட சொல்வதில்லை. பெற்றோரும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இடம் கிடைத்தால் போதும் என்று நின்று கொள்கிறார்கள்.

ஆனால் பிற ஊர் பள்ளிகளில் இந்த அளவுக்குக் கெடுபிடி கிடையாது. நல்ல மார்க் வாங்கினால் போதும் இடம் கிடைத்து விடுகிறது. அதற்கு மேல் அந்தப் பள்ளிக் கூடங்களே, மாணவ, மாணவியரை சிறப்பாக படிக்க வைக்கிறது.

அந்தப் பிள்ளைகளின் தாய், தந்தையரும் கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பிள்ளைகளுக்காக உழைக்கிறார்கள். சிம்னி விளக்கிலும், தெரு விளக்கிலும், வீட்டு வேலை பார்த்துக் கொண்டும், கஷ்டப்பட்டு படிக்கும் மாணவ, மாணவியர் எத்தனையோ பேர் இன்று நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பட்டணத்து மாணவர்களை 'பீட்' செய்து கொண்டிருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X