For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரதம்-'நோயாளிகளான' பயிற்சி டாக்டர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுக்கும், பயிற்சி டாக்டர்களுக்கும் இடையே நடந்த 3வது பேச்சுவார்த்த்தையும் தோல்வி அடைந்து விட்டது. இதையடுத்து ஸ்டிரைக் தொடரும், எங்களது விஷயத்தில் முதல்வர் கனிவு காட்ட வேண்டும் என்று பயிற்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் முது நிலை மருத்துவ மாணவர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசு 2 முறை முன்பு பேச்சு நடத்தியது. ஆனால் இந்த இரண்டு பேச்சுக்களும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜுடன் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் அவரவர் நிலையில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியைச் சந்தித்தது.

2 பேர் நிலைமை மோசம்...

இந் நிலையில் பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரதம் இன்று 3வது நாளாக நீடித்து வருவதால் மேலும் 5 டாக்டர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9 பேர் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சென்னையை சேர்ந்த பியுஷின், தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண் பயிற்சி டாக்டர்களும் குதித்துள்ளனர்.

பயிற்சி டாக்டர்கள் தரப்பில் கூறுகையில்,

உங்களின் முழு போராட்டத்தை கைவிட்டால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அவர்கள் கூறினார்கள். நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை வேண்டும் என்றால் கைவிடுகிறோம். முதல்வர் கருணாநிதியிடம் எங்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறினோம்.

ஆனால் அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறி எங்களை அனுப்பி விட்டனர். முதல்-அமைச்சர் எங்கள் விஷயத்தில் கொஞ்சம் கனிவாக நடக்க வேண்டுகிறோம் என்றனர்.

600 தற்காலிக டாக்டர்கள் நியமனம்..

ஸ்டிரைக் இப்போதைக்கு முடிவது போல தெரியாததால், 600 தற்காலிக டாக்டர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.

வீடுகளுக்கு தந்தி...

இந்த நிலையில், பயிற்சி டாக்டர்கள், முது நிலை மருத்துவ மாணவர்களின் வீடுகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம், அவசர தந்தியை அனுப்பி வருகிறதாம். அதில் அரசின் சலுகைகளை எடுத்துக் கூறி போராட்டத்திலிருந்து உங்களது பிள்ளையை விலகியிருக்குமாறு அறிவுரை கூறுமாறு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பணிக்குத் திரும்பிய டாக்டர்கள்..

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களில் சிலர் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் விநாயகம் கூறுகையில்,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள், மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்று அரசு விரும்பவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

மாணவர்களின் பெற்றோர்களுக்கு 2 முறை கடிதமும், தந்தியும் கொடுத்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் சொல்லியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இன்றுடன் 15 நாட்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர்களின் பயிற்சிக் காலம் நீட்டிக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்பி வருகிறார்கள். அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லியில் 14 பேரும் திரும்பியுள்ளனர்.

2,000 பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேல் படிப்பில் ஈடுபடக்கூடிய மாணவர்கள், பல்கலைக்கழகத்திடம் விளக்கம் பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தங்கபாலு கோரிக்கை..

இந் நிலையி்ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில்,

பயிற்சி மாணவர்களின் போராட்டத்திற்கு மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், கால்நடை மருத்துவ பயிற்சி மருத்துவர்களும் கூட ஆதரவு தெரிவித்து வருவதின் காரணமாக தீவிரமாய் கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காண வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து போராடுவதை கைவிட்டு முதல்வரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தான் பிரச்சனை தீர உகந்த வழியாக அமையும். போராட்டத்தில் பெரிதும் பாதித்துள்ள பொதுமக்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.

தங்களது கோரிக்கையை முன்னிறுத்தி போராடுவது ஜனநாயக உரிமை தான். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் முதல்வருடன் பேச்சுவார்த்தையின்போது தங்களிடமுள்ள நியாயத்தை, கோரிக்கையை எடுத்துரைப்பதன் மூலம் சுமூகத் தீர்வுக்கு வழி பிறக்கும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X