For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்போது வரும் 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'!?

By Staff
Google Oneindia Tamil News

Admiral Gorshkov
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் பழைய விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்திய கடற்படை மிக அதிகமான விலையை வழங்குவதாக மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இப்போது ஐஎன்எஸ் விராட் என்ற ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தான் உள்ளது. இது மிகவும் பழதாகிவிட்டதால் அதை 2007ம் ஆண்டில் ஓரங்கட்ட இந்திய கடற்படை திட்டமிட்டது.

இதற்குப் பதிலாக அட்மிரல் கோர்ஸ்கோவ் என்ற விமானம் தாங்கிக் கப்பலை வாங்க திட்டமிட்டது இந்தியா. இந்தக் கப்பலை 2008ம் ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக ரஷ்யா உறுதியளித்தது.

அட்மிரல் கோர்ஸ்கோவ் கப்பலும் ஒரு பழைய கப்பலே. சோவியத் யூனியன் பயன்படுத்திவிட்டு மிகப் பழசானதால் ஓரங்கட்டிய இந்தக் கப்பலை புதுப்பித்து இந்திய கடற்படை பயன்படுத்த திட்டமிட்டுள்ளளது. இதற்காக 2000ம் ஆண்டில் இது தொடர்பாக ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி ரூ. 5,000 கோடிக்கு இந்தக் கப்பலை இந்தியாவுக்குத் தரவும், அதை ரிப்பேர் செய்வது, புதிய ஆயுதங்களைப் பொறுத்துவது ஆகிய பணிகளை ரஷ்யா இலவசமாக செய்து தரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், திடீரென ரஷ்யா கப்பலுக்கு கூடுதல் விலையைக் கோரியது. இதை இந்தியா ஏற்றது. மீண்டும் மீண்டும் விலையை ஏற்றிக் கொண்டே போனது ரஷ்யா. இந்த விமானம் தாங்கிக் கப்பலில் செயல்படும் விமானங்களின் விலையையும் கூட்டியது.

இப்படியாக கடந்த 4 வருடங்களில விலையை ஏற்றி ஏற்றி இப்போது இதன் விலை இரண்டு மடங்கை விட அதிகமாகிவிட்டது. அதாவது, இப்போது இந்தக் கப்பலை 1.82 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கவுள்ளது இந்தியா. இது கிட்டத்தட்ட ரூ. 7,202 கோடியாகும். ஆனால், இந்த அரதப் பழசான கப்பலுக்கு இவ்வளவு விலை தருவது வேஸ்ட் என்கிறது ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம்.

இது குறித்து மத்திய அரசின் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General of India-CAG) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

புதிய கப்பலே இந்த விலைக்குத் தயாராக இருக்கும்போது ஏன் இவ்வளவு விலையை கொடுத்து இதை வாங்க வேண்டும் என்று தெரியவில்லை.

மேலும் இந்தக் கப்பலின் ஆயுட்காலம் முடிந்துபோய் அது புதுப்பிக்கப்படுகிறது. இந்தக் கப்பலை 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தவே இந்திய கடற்படை திட்டமிட்டிருந்தது.

ஆனால், இந்தக் கப்பலின் டிரையல் முடியவே 2012ம் ஆகிவிடும். இதனால் இந்திய கடற்படைக்கும் நீண்ட நாட்களுக்கு இது பயனுடையதாக இருக்காது.

மேலும் இந்தக் கப்பலில் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இது தொடர்பான முழு விசாரணைக்கு எங்களுக்கு போதிய ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

65 சதவீதம் அளவுக்கு பணத்தை இந்தியா கொடுத்துவிட்டாலும் 35 சதவீதப் பணிகளே முடிவடைந்துள்ளன என்று கூறியுள்ளார் ஆடிட்டர் ஜெனரல்.

இந்தக் கப்பல் வந்து சேர தாமதமாவவை லேட்டாகவே உணர்ந்த கடற்படை இப்போது ஐஎன்எஸ் விராட் கப்பலை கொச்சி யார்டில் வைத்து மேம்படுத்திக் கொண்டுள்ளது.

இன்னும் இந்தக் கப்பலே தயாராகாத நிலையில் அதற்கு 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' என்று பெயரை மட்டும் முதலில் வைத்துவிட்டது இந்திய கடற்படை.

மறுபடியும் ரஷ்யா முருங்கை மரத்தில் ஏறாமல் இருந்தால் சரி..!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X