ஸ்வைன்: பெங்களூரில் மேலும் 2 பேர் பலி-சட்டீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர் சாவு

பெங்களூரில் நாகரபாவியைச் சேர்ந்த சிவண்ணா (55) என்பவரும், ஒய்ட்பீல்டு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (28) என்ற வாலிபரும் நேற்று இரவு பலியாயினர். இதன்மூலம் பெங்களூரில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சிவண்ணா ராஜாஜிநகரில் உள்ள ஒர்க்ஹார்ட் மருத்துவமனையிலும் மஞ்சுநாத் ஒயிட்பீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனையிலும் பலியாயினர்.
பிலாஸ்பூரில் மத்திய ரிசவ்ர் டையைச் சேர்ந்த 40 வயது வீரர் இந்த நோய்க்கு நேற்று பலியானார்.
இதுவரை இந்த நோய்க்கு புனேவில் 15 பேரும், பெங்களூர், மும்பையில் தலா 3 பேரும், சென்னை, அகமதாபாத், வதோதரா, திருவனந்தபுரம், நாசிக், ராய்ப்பூரில் தலா இருவரும், பிலாஸ்பூரில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,398 ஆக உயர்ந்துள்ளது. இதில் 125 பேர் நேற்று இந்த நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 29 பேர் மும்பையிலும் 4 பேர் புனேவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ஹைதராபாத்தில் தலா 13 பேரும், அகமதாபாத், சூரத்தில் தலா 5 பேரும்,
பெங்களூரில் 9 பேரும், கொல்கத்தாவில் 6 பேரும், ஓஸ்மான்பாத்தில் 4 பேரும், சென்னை, புதுச்சேரியில் தலா 3 பேரும், நதேத், நாக்பூர், மங்களூர், கோவா, ஸ்ரீநகர், ஹூப்ளியில் தலா 2 பேரும், துலே, நாசிக், லாத்தூர், பஞ்குலா நகர்களில் தலா ஒருவரும் நேற்று இந்த நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 டாக்டர்களுக்கு ஸ்வைன்:
கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன், ஆயுர்வேத டாக்டர்களான ராகுல் சூர்யா, கேசவ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் புனே நகரில் இருந்து ஹூப்ளி வந்தவர்கள் ஆவர்.
உறியடி நிகழ்ச்சிகள் ரத்து:
மகாராஷ்ரத்தில் ஜென்மாஷ்டமி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்போது பன்றி காய்ச்சல் பரவியுள்ள நிலையில் புனே நகரில், ஜென்மாஷ்டமி திருவிழாவையொட்டி நடக்கும் உறியடி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
புனே-இறந்த 3 பேருக்கு ஸ்வைன் இல்லை..
இதற்கிடையே புனே நகரில் இறந்த 8 மாதக் குழந்தை உள்ளிட்ட 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அம் மாவட்ட கலெக்டர் சந்திரகாந்த் தாஸ்வி தெரிவித்துள்ளார்.
சுவாபிமான் காம்ளே என்ற 8 மாதத் குழந்தை, பாரதி கோயல், கெளதம் ஆகிய மூவரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்று சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.