கருணாநிதி உடல்நலம் குறித்த புரளியால் பெரும் பரபரப்பு!
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருவதாக துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேற்றிரவு புரள கிளப்பப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் உருவானது.
இதையடுத்து சென்னையின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் எஸ்.எம்.எஸ். மூலமும் இந்தத் தகவல் வேகமாக பரவியது. செய்தி நிறுவனங்களுக்கும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.
இதையடுத்து கருணாநிதி நலமாக உள்ளதாகவும், அவரது உடல் நலம் குறித்து வெளியாகும் புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் கலைஞர் தொலைக்காட்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்ட வேண்டுகோள் 'பிளாஷ்' செய்தியாக வெளியானது.
இந் நிலையில் டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஸ்டாலினிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது,
முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான தகவல்கள் சிலரது திட்டமிட்ட சதியாகும். அவர் நலமாக உள்ளார்.
இடைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலைப் புறக்கணித்த அதிமுக அணிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும் என்றார்.