அதிமுகவை புறக்கணித்த மக்கள்-தங்கபாலு
சென்னை: இடைத்தேர்தலில் மக்கள் தங்களை புறக்கணித்த அதிமுகவை புறக்கணித்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இதை தமிழக காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அவருக்கு ஆதரவு தந்தவர்களையும் மக்கள் புறக்கணித்துவிட்டனர்.
இடைத்தேர்தலில் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் தந்துள்ளனர். 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது. தனி நபரை விட இந்திய நாட்டின் இறையாண்மை தான் முக்கியமானது.
மத்திய, மாநில அரசுகள் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த பிரச்சினையும் இல்லாததால் தமிழர்களை திசை திருப்புவதற்காக சில அமைப்புகள் தேவை இல்லாத பிரசாரங்களில் ஈடுபடுகின்றன என்றார்.