For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெரிந்ததைச் சொல்ல விஜயகாந்த்துக்கு ஏன் தயக்கம்? கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சம்மந்தம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டதால் அவர்கள் யார் என்று கேட்டு, அதன் மீது விசாரணை மேற்கொள்ளத் தயாராக காவல்துறை அதுபற்றிய விவரத்தை அறிய விசாரித்து தெரிந்து கொள்ள சம்மன் அனுப்பினால், பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவர் என்றால் நேரில் சென்று தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறுவதற்கு ஏன் தயங்குகிறார் விஜயகாந்த்? என்று முதல்வர் கேட்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: தி.மு.கழக அரசின் இலவசத் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் என்பதைத் தாண்டி வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லை தாண்டிப் போவதாக "இந்தியா டுடே" இதழ் கட்டுரை தீட்டியிருக்கிறதே?

பதில்: ஒரு பொருள் பற்றி வாதம் செய்வோர் உண்டு. எதிர் வாதம் செய்வோரும் இருப்பர். இவர்களை அன்னியில் மூன்றாவது அணியினர் ஒருபுறம் இருப்பார்கள். அவர்கள் தான் "குதர்க்க வாதம்" செய்வோர். அப்படிப்பட்ட ஒருவர் தான் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைப் பற்றி குறை கூறி அந்தக் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

அந்தக் கட்டுரையாளர் தன் வாதத்திற்கு ஆதரவாக சீனப் பழமொழி ஒன்றைத் துணைக்கு அழைத்திருக்கிறார். "பசி என்று வருபவனுக்கு மீனைக் கொடுக்காதே; மீன் பிடிக்கக் கற்றுக் கொடு" என்று எழுதியிருக்கிறார்.

அதாவது ஒருவன் பசி உயிர் போகிறதே என்று அவரிடம் கேட்டால், உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம். அவன் அதைக் கற்றுக்கொள்வதற்குள் அவன் உயிரே போய் விடும்.

அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" அதாவது தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஒருவருக்கு செய்கின்ற உதவி உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். மாறாக உன்னை நீயாகவே சம்பாதிக்க வைக்கிறேன், நீ இலவசமாக எதையும் பெறக் கூடாது என்றெல்லாம் கூறினால், அவன் அதற்குத் தயாராவதற்குள் போய்ச் சேர்ந்து விடுவான்.

இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்காக 150 கோடி- கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவி 250 கோடி என்றெல்லாம் கட்டுரை ஆசிரியர் பட்டியல் இட்டுள்ளார்.

இத்தகைய உதவிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கும் வரை இத்தகைய உதவிகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் முன்னேற்றம் அடைய செய்து விட்டோமென்றால், அதன் பிறகு இலவசத் திட்டங்களை நிறுத்தி விடலாம்.

ஆனால் மக்கள் அந்த அளவிற்கு வாழ்க்கையிலே முன்னேறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை இத்தகைய உதவிகள் அளிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் கழக அரசின் குறிக்கோள். கட்டுரை ஆசிரியர் தமிழக அரசின் ஒட்டுமொத்த பற்றாக்குறை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், அப்படியிருக்கும் போது இலவசத் திட்டங்கள் தேவை தானா என்றும் வருத்தப்படுகிறார்.

இலவசத் திட்டங்களை வழங்காத மாநில அரசுகளில் பற்றாக்குறையே கிடையாதா? அப்படி எந்த மாநிலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது? அது மாத்திரமல்ல. தமிழக அரசு தனது மொத்த பட்ஜெட்டையும் இலவசத் திட்டங்களுக்குச் செலவு செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், மக்கள் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்பதற்காகவும் எத்தனையோ கோடிகள் நிதி ஒதுக்கியிருப்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.

உதாரணமாக 2009-2010 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை, கால் நடைத் துறை, பால்வளத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் விவசாய வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு மட்டும் 5,236 கோடி ரூபாயாகும். 2005-2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 1,346 கோடி ரூபாய்.

அதனை இந்த ஆண்டு 2,855 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம் என்றால், அந்தத் தொகை இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையா என்பதை கட்டுரை ஆசிரியர் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீர் வள நில வளத்திட்டத்திற்காக 533 கோடி ரூபாயும், நீதித்துறைக்காக 378 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் 9,147 கோடி ரூபாயும் உயர் கல்வித் துறைக்காக 1,463 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதெல்லாம் இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று இந்தியா டுடேயில் கட்டுரை எழுதியிருப்பவர் எண்ணுகிறாரா?

எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவசத் திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

கேள்வி:- அண்மைக் காலமாக மாலையில் வரும் நாளேடு ஒன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. 30-ந் தேதிய மாலை செய்தியில் பனையூர் கொலை வழக்கு குறித்து இரண்டு பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் காவல்துறை சார்பில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் குறித்து அளித்த அறிக்கையை பெரிதாக வெளியிட்டிருக்கிறதே. அதற்கு அரசு சார்பில் காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருப்பவர் என்ற முறையில் தாங்கள் அளிக்கும் விளக்கம் என்ன?

பதில்: நேற்றைய தினம்( நேற்று முன்தினம்) செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போது இது குறித்து கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்திருக்கிறேன். அப்போதே இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அந்தக் கொலைகள் குறித்த விசாரணையை சென்னை மாநகர காவல் துறையினரிடமிருந்து, சி.பி., சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள விவரத்தைத் தெரிவித்திருக்கிறேன்.

இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் சில தடயங்கள் காவல் துறைக்கு கிடைக்கும்போது, அதனை வைத்துக் கொண்டு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். சட்டத்தின் முன்பாகவும், நீதியின் முன்பாகவும் அரசியல்வாதிக்கு ஒன்று, சாதாரண மக்களுக்கு ஒன்று என்று எடுத்துக் கொள்வதில்லை.

இந்த வழக்கிலே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சம்மந்தம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டதால் அவர்கள் யார் என்று கேட்டு, அதன் மீது விசாரணை மேற்கொள்ளத் தயாராக காவல்துறை அதுபற்றிய விவரத்தை அறிய விசாரித்து தெரிந்து கொள்ள சம்மன் அனுப்பினால், பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவர் என்றால் நேரில் சென்று தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறுவதற்கு ஏன் தயங்குகிறார்?.

அப்படியானால் அவர் முதலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு அதிலே பங்கு உண்டு என்று சொன்னது தவறான தகவலா? சில நாட்களுக்கு முன்பு இவரே தான் அரசின் சார்பாக இலவசமாக வழங்கப்படும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம் ஏதோ ஒரு மருத்துவமனையிலே அறைக்கு அறை வைத்திருப்பதாக ஒரு பெரிய குற்றச்சாட்டை சொன்னார்.

உடனடியாக நான் எந்த மருத்துவமனை என்று தெரிவித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டேன். ஆனால் மருத்துவ மனையைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பணி என்று பதில் அறிக்கை விடுத்தார்.

அதுதான் முறையான பதிலா என்பதை பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று யார் மீதாவது குறிப்பாக ஆளுங்கட்சியின் மீது குற்றஞ்சாட்டுவது அதற்கு விளக்கம் கேட்டால், ஓடி ஒளிவது என்பது அரசியல்வாதிக்கு அழகல்ல.

கேள்வி: 30-ந் தேதிய மாலை நாளேட்டில் பனைiர் இரட்டைக் கொலை சம்பவத்தில் மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு அஞ்சி கிராம மக்கள் ஓட்டம் என்றும் அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறார்களே?

பதில்: அந்த வழக்கு விசாரணை தற்போது சி.பி., சி.ஐ.டி., பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதிலே உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்ற அக்கறையோடு விசாரணை நடைபெறுகிறது. உண்மையை வெளிக் கொணர்வதற்காக காவல் துறையினர் பலரிடம் விசாரணையை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் அந்த மாலை ஏடு மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகின்ற வகையில் செய்தி வெளியிட்டிருப்பது உண்மையல்ல. எந்தக் கிராம மக்களும் அஞ்சி ஓடவில்லை. அவரவர்கள் இருக்கும் இடத்திலே தான் பத்திரமாக இருக்கிறார்கள்.

கேள்வி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்தையும், அரசையும் தொடர்ந்து தாக்கி வருகிறார். அவரது பேச்சுக்கு தி.மு.கழக மூத்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் கூட பதிலளித்து ஒரு சில நாளேடுகளில் அது வந்துள்ளது. இந்தப் போக்கு தோழமைக் கட்சிகள் இடையே தேவையா?

பதில்: தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. தி.மு.கழகத்தைப் பற்றியோ, அரசைப் பற்றியோ ஒருசில விரல் விட்டு எண்ணத்தக்க காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற விமர்சனங்களில் ஈடுபடுவதும், அதற்கு பதில் சொல்கிறேன் என்று இந்தப் பக்கமிருந்து சிலர் முற்படுவதும் விரும்பத் தக்கதல்ல. எரிவது நின்றால் கொதிப்பது அடங்கி விடும் அல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X