மனைவியை சுட முயன்ற போலீஸ்காரர்
நாகர்கோவில்: மத்திய ரிசர்வ் போலீஸில் வேலை பார்க்கும் தனது கணவர் துப்பாக்கியால் மிரட்டி கொல்ல முயன்றதாக நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் புகார் போலீஸில் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் பெயர் அனிதா. பிஏ வரை படித்துள்ள அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள கட்டாத்துறை கவியல்லூர் கோணத்துவிலை என்ற பகுதியை சேர்ந்த கோபலன் என்பவரின் மகள்.
இவருக்கும் குட்டகுழி வடக்குவிளையை சேர்ந்த நேசமணி மகன் ரமேஷ்க்கும் கடந்த 03-09-04 அன்று திருமணம் நடந்தது. ரமேஷ் திருணமத்தின்போது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணத்தின் போது 36 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில்,
எனது கணவர் ரமேஷ் திருமணம் முடிந்த 5வது நாளில் இருந்து குடித்துவிட்டு தகாத வார்த்தை என்னை திட்டுகிறார். கொடுமைப்படுத்துகிறார். இது தினமும் நடக்கிறது.
இந்நிலையில் அவருக்கு ஆந்திர மாநிலத்துக்கு மாற்றல் கிடைத்தது. அவர் என்னை 11-08-06 அன்று அங்கு அழைத்து சென்றார். நான் 7 மாதங்கள் அங்கு அவருடன் தங்கியிருந்தேன்.
அங்கு ஒரு நாள் அவர் என்னை பூட்ஸ் காலால் மிதித்தார். அதில் நான் மயக்கமடைந்தேன். அப்போது நகைகளை எடுத்து சென்று விட்டார்.
மேலும், ஒரு நாள் குடிபோதையில் வந்து தகாத வார்த்தைகளை பேசி துப்பாக்கி முனையால் முதுகில் குத்தி, காயப்படுத்தினார். அதன்பிறகு மண்எண்ணெய்யை எடுத்து வந்து என் மீது ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றார்.
ஆனால், நான் அலறி சத்தம் போட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் பேசி மறுநாள் என்னை ஊருக்கு அனுப்பி வைத்தனர் என்றார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கவள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.