கம்யூனிஸ்டுகளிடம் ஏமாறாதீர்-ராமகோபாலன்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது அண்டை நாடுகளான நேபாளம், மியான்மர் (பர்மா), இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை அளித்து சீனா தனது கைக்குள் போட்டுக் கொண்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களை ஒடுக்க ராணுவ உதவியை அளித்தது சீனா. தற்போது சீனா தனது ராணுவ தளத்தை இலங்கையில் நிறுவ முயற்சிக்கிறது.
பாரதத்திற்குள் குறைந்த விலையில் மட்டமான, சுற்றுச்சூழலுக்குக் கெடுதலான ஏராளமான பொருட்களைக் கொட்டி வருகிறது சீனா. இதன் மூலம் பாரதத்தின் பொருளாதாரம், வியாபாரம், உற்பத்தி சின்னாபின்னமாக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது.
மக்கள் விழிப்படைந்து பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும், இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிக்கத் துடிக்கும் சீனாவை எதிர்க்க முன்வர வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவின் மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தித் தேசத் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களிடம் மக்கள் ஏமாறக்கூடாது.
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்கள் தோல்வியை அளித்தது பாராட்டத்தக்கது. மேலும் மக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களை, கட்சிகளை எல்லாவகையிலும் புறக்கணித்து ஒடுக்க வேண்டும்.
சீனா நமக்குப் பகை நாடு, நமது நாட்டை அழித்து, நம்மை விழுங்கப் பார்க்கிற நாடு என்பதை மக்களும், அரசும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, சீனாவின் ஆக்கிரமிப்பு, கம்யூனிஸ்ட் பயங்கரவாத ஆதரவை எதிர்த்துக் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசை வற்புறுத்த மக்கள் முன் வர வேண்டும்.
இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் சீனப் பொருட்களை புறக்கணிக்க, தடை செய்ய வேண்டும். மத்திய அரசு சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர் சீனா பற்றி மாறுபட்ட கருத்தைத் தெரிவிப்பதைத் தவிர்த்து ஒரே குரலில் சீனா மீது எதிர்ப்பை வெளிக்காட்டி உலகுக்கும், மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கையால்தான் சீன ஆதரவு கம்யூனிச பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். அதற்கு மக்கள் மத்திய, மாநில அரசைத் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.